வலைத்தளத்தில்
குழந்தைகளுக்கான பகுதியில் இந்தச் சிறுகதையினைப் படித்தேன். இது பெரியவர்களும்
அறிய வேண்டிய அற்புதமான பாடம். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதை நாம் நன்கு
அறிந்தாலும் நம் பேராசை, பல சமயங்களில் நம் கண்களை அஞ்ஞானம் மறைத்து “விதியை மதியால் வெல்ல்லாம்” என்ற
பழமொழியை முன் உதாரணம் காட்டி, அதன் பலா பலன்களை நாம் அனுபவிக்கிறோம்.
அது தான்
மனிதன். மனிதன் பிறக்கும் பொழுதே அவனது வாழ்க்கையின் முழு புத்தகத்தையும் கடவுள்
எழுதி அனுப்பிவிடுகிறார். இந்தப் பிறவியில் செய்யும் நற்பயன்கள் அடுத்த புத்தகத்தை
சரியாக எழுத வகைப்படுத்துகிறது.
காட்டில் ஒருவன்
தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தான்.அவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு
உடைமைகள் எதுவுமில்லை.அவர்கள் பகலில் நிர்வாணமாக இருந்து வந்தார்கள். எனவே, பூமியில் மூன்று குழிகள் வெட்டி அதில்
கழுத்தளவு நிற்பார்கள். பகல் மறைந்த பிறகு இரவு நேரத்தில் குழிகளிலிருந்து வெளியே
வந்து ஏதாவது உணவைத் தேடிக் கொள்வார்கள்.ஒருநாள், இவர்களின் நிலையைப் பார்த்து வருந்திய
ஒரு மகான் இறைவனிடம், “இந்த அனாதைகளுக்கு நல்வாழ்வு அளிக்க
வேண்டும்” என்று வேண்டினார்.
அதற்கு
இறைவன், “அவர்கள் விதியில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்” என்றார்.
ஆனால்
அந்த மகான் பிடிவாதம் செய்யவே இறைவனும் அந்த மூன்று பேருக்கும், மூன்று வரங்கள் அளிப்பதாகத்
தெரிவித்தார்.இறைவனின் நற்செய்தியை அந்த மூன்று பேரிடமும் சொல்லி, “நல்ல வாழ்க்கை வாழுங்கள்” என்று அருளிச் சென்றார்.
அவன்
மாலையில் குளிக்கச் சென்றான். குளித்து முடித்த பிறகு இறைவனிடம் நிறைய செல்வம்
கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
இதற்குள்
அவன் மனைவி இறைவனிடம், “நான் அழகியாக வேண்டும்” என்று கேட்டாள்.
உடனே அவள்
தேவதை போன்ற பெண்ணாக மாறினாள்.அப்போது அங்கு இளவரசன் ஒருவன் அங்கு வந்தான். அவன்
அவளது அழகில் மயங்கி அவளைத் தன் குதிரையில் ஏற்றிச் சென்றான்.அவள் நிர்வாணமாக
இருந்ததால், இளவரசன் அவனது உடையால் அவளது உடலை மூடினான்.இதைக் கண்ட அவளது
கணவன், “என் மனைவிக்குப் பன்றியின் முகம் வர வேண்டும்” என்று இறைவனிடம் ஒரு வரம் கேட்டான்.
அவள்
முகம் பன்றியாக மாறியது. இதைக் கண்டு பயந்து போன இளவரசன், அவளைக் குதிரையிலிருந்து கீழே
தள்ளிவிட்டுச் சென்றான்.அவர்களது மகன் நடந்ததை அறிந்து, தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் தாய்க்குப்
பழைய சுய உருவம் வர வேண்டும் என்று இறைவனிடம் வரம் கேட்டான்.அவனது தாயும்
சுயஉருவம் அடைந்தாள்.இப்படி அவர்கள் மூவருக்கும் அளிக்கப்பட்ட வரங்கள் மூன்றும்
வீணாகப் போயின.மீண்டும் அவர்கள் குழிகளுக்குச் சென்று பழைய வாழ்க்கையைத்
தொடர்ந்தார்கள்.இதைக் கண்ட மகான், “விதியை மாற்றமுடியாது. அனைத்தும் இறைவன்
செயல்படியே நடக்கும்” என்ற உண்மையை உணர்ந்தார்.