Wednesday, November 27, 2013

Raamaa ninnu namminavaaramu - Tygaraja


திரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நெற்றியில் குங்குமம் ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்? விநாயகர் முன் குட்டிக் கொண்டு, தோப்புக் கரணம் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும், விறட்டி கொண்டு ஏன் ஹோமம் செய்யவேண்டும் என்று கேட்கும் நம் குழந்தைகள், மேல் நாட்டிற்குச் சென்று, மேலை நாட்டவர் அதனை ஏன் செய்யவேண்டு, எப்படிச் செய்யவேண்டும் என்று ஆய்வுக்கட்டுரை எழுதியவுடன் அதனை நம்மவர் சிலர் பின்பற்றும் அவலம் நம்மிடயே உள்ளது. பலர் அதனை தெரிந்து கொண்டு செயல்படுகின்றனர். இன்றும் மேலை நாட்டில் நம்மவர் பலர் அன்று முதல் இன்றுவரை ஹிந்துமத கலாசாரங்களைப் பின்பற்றுகிறார்கள். பின்பற்றாத ஒரு சிலருக்கு இந்த கண்ணொளி ஒரு பாடமாக இருக்கும். அருமையான உச்சரிப்பு, நேர்தியான ஸ்ருதி சுத்தமான சங்கீதம். 
உலகத்தவரின் மங்கவரும் ராமா! நாங்கள் உன்னையே நம்பியுள்ளவர்களல்லவா? பாமரருக்கு எட்டாதவனே! உத்தம குணங்கள் நிரம்பியவனே! தயை பொழியும் கடைக்கண் பார்வையுடைவனே! மங்கள ஸ்வரூபனே! முனிவர் இதயமெனும் தாமரையை வட்டமிடும் வண்டு போன்றவனே.
உலகில் உள்ள அனைவர் இதயத்தாமரையை இப்பொழுது இந்த பாட்டின் மூலம் ராம நாமம் என்ற ரீங்காரம் எழுகின்றது. மேலும் பரவட்டும். 

Monday, November 25, 2013

SUPERSTITION ??!!


Superstition, belief in supernatural causality: that one event leads to the cause of another without any natural process linking the two events, such as astrology, religion, omens, witchcraft, etc., that contradicts natural science.

-Courtesy Wikipedia 

மூட நம்பிக்கை என்றால் என்ன. பகுத்தறிவாதி என்பவர் யார். மதம், கடவுள் பக்தி, சோதிடம் இவைகளில் நமிபிக்கை வைப்பவர்களை மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்பவரா? 

பகுத்தறிவாதிகள் என்பவர்கள் விஞ்ஞானத்தில் கரைகண்டவர்களா? அப்படிஎன்றால் அவர்கள் உலகரீதியில் மிகவும் புத்திசாலிகளா என்ற பல ஐயங்கள் நமக்கு வருகிறது. பரமாச்சார்யார்  மூடனம்பிக்கையைப்   பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். கே.என்.ஆர்.ரமேஷ் என்பவரது ப்ளாகில் நான் படித்தது.

பகுத்தறிவு - மூட நம்பிக்கை பற்றி  மகாபெரியவா கூறியது 


Tuesday, November 19, 2013

KISALAYA SAYANA - 23- ASHTAPATHI

गतवति सखीवृन्देऽमन्दत्रपाभरनिर्भर-
स्मरशरवशाकूतस्फीतस्मितस्नपिताधराम्।
सरसमनसं दृष्ट्वा राधां मुहुर्नवपल्लव-
प्रसवशयने निक्षिप्ताक्षीमुवाच हरिः प्रियाम् ॥१॥


ஆதார ஸ்ருதிக்கு யாழினை அன்றைய நாட்களில் கையாண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூலகளிலிருந்து நாம் அறியலாம்..
மாயாமளவகௌளம், கல்யாணி, சங்கராபரணம் என்ற மூன்றும் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் போன்று எல்லா சங்கீத அமைப்புகளிலும் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் யாழின் ஒலியினை ஆதாரஸ்ருதியாகக் கொண்டு பாடினர். அவரவர் குரலுக்குத் தகுந்தாற்போல் யாழின் நரம்புகளை கூட்டியோ குறைத்தோ பாடிவந்தனர். 440HZ என்ற ஒழி அளவினை ஆதாரமாக வைத்து அமைக்கப்பட்ட சுருதி பிற்காலத்தில் தான் வந்தது. யாழின் சுருதியைக் கூட்டிப் பாடும் பொழுது சில சமயங்களில் மேல் ஷட்ஜமத்தை இசைக்கமுடியாமல் பாடி உருவாகியியுள்ளதோ என்ற கருத்து ஒன்று உள்ளது. நிஷாதாந்திய ராகங்கள் அவ்வாறு வந்ததாக ஒரு கருத்து. நாதநாமக்ரியாவும், சித்தஞ்சனியும் இந்த வகையில் உள்ள ராகங்கள். நாதநாமக்ரியா மாயாமளவ ராகத்தில் ஜன்யமாக அமைந்த்துள்ளது. 
இந்த அற்புத ராகம் ஒரு தெய்வீகமான மதுரமான மயக்கத்தைத் தரும் ராகம் என்பதால் இந்த அஷ்டபதியினை இந்த ராகத்தில் அமைத்துள்ளனர். பிரிந்த கிருஷ்ணனும் ராதையும் சேர்ந்தவுடன் எவ்வாறு அவர்கள் மன நெருக்கத்தை அனுபவித்தார்கள் என்பதே இந்த அஷ்டபதியின் உட்கருத்து.

Tuesday, November 12, 2013

RADHA VADHANA - 22 - ASHTAPATHI

ராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம்
22வது கல்யாண அஷ்டபதி
ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன
ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப்ரவிவேச நிவேஸனம்
सा ससाध्वससानन्दं गोविन्दे लोललोचना।
शिञ्जानमञ्जुमञ्जीरं प्रविवेश निवेशनम्
மத்யமாவதி ராகத்தில் அமைந்த இந்த 22வது அஷ்டபதி 22வது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஔடவ ஜன்ய ராகமாகும். மதுமத் ஸாரங் என்ற ஹிந்துஸ்தானி ராகம் இதன் ஒற்றுமையான ராகம். இனிமையான சூழலில் பாடப்படும் ராகம். கல்யாண காலத்தில் இசைக்க வேண்டிய ராகம். இசைக் கச்சேரிகளில், முடிக்கும் தருவாயில் இநத ராகத்தை கையாளுவர். க்ரஹ பேதம் என்று சொல்லும் முறையில் இந்த ராகத்தினை இசைத்தால் மோஹனம், ஹிந்தோளம், ஸுத்த ஸாவேரி மற்றும் உதயரவிசந்த்ரிகா என்ற ராகங்களின் அமைப்புகளை காட்டலாம். இந்த ராகத்தில் சிறிய மாற்றங்களைச் செய்தால் கேதாரகௌளை, மணிரங்கு, ரேவதி, ப்ருந்தாவன ஸாரங்கா, ஆந்தோளிகா என்ற ராகங்களை இசைக்கலாம். இந்த ராகத்தில் காந்தாரம் மற்றும் தைவதம் இல்லாததால், சாருகேசி, நடபைரவி மற்றும் ஹரிகாம்போதியிலிருந்து பிறந்ததாகவும் சிலர் சொல்லுவர்.
ராதை என்ற அழகுப் பதுமை, கருநிறமேகம் போன்ற கூந்தலை உடையவள், இருகைகளிலும் குலுங்கும் வளையல்களை அணிந்தவள், நாணத்துடன் சாமரத்தை வீசி க்ருஷ்ணனை இன்புறச் செய்யப் பாடும் இந்தப் பாடலை ஒரியாவில் வரதி என்ற ராகத்தில் இசைத்தனர் என்பர்.

Thursday, November 7, 2013

DWAPARAYUG KUBJA - KALIYUG JANABAI

க்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள். கம்ஸனின் வண்ணான் க்ருஷ்ணரை தூஷித்து நல்ல ஸாயுஜ்யம் அடைந்தான். இது ஒரு நிந்தாஸ்துதி. கூன்முதுகுடன் அவலக்ஷணமான குப்ஜை என்பவள், கம்ஸனுக்கு சந்தனம் அரைத்துத்தரும் பணிப்பெண், எப்பொழுதும் க்ருஷ்ணனை த்யானித்து, மனதளவில் க்ருஷ்ணனுக்கு தாஸியா இருக்க வேண்டி இருந்தவளுக்கு, எல்லோரும் போற்றும் வண்ணம் அழகியாக மாற்றி ஆட்கொண்டார். மற்றுமொறு பிறவி இருந்தாலும் நான் உனது தாஸியாகதான் இருக்க வேண்டும் என்று விரும்பியதன் பயன், கலியில் ஜனாபாயாக வந்து அவளை பண்டரிபுரம் விட்டலன் தடுத்தாட் கொண்ட இந்த சரிதம் கி.பி.1263ம் ஆண்டு தொடர்ந்த்து.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மகளிர் ஸந்யாஸிகளில் முதன்மையாகப் பேசப்படுபவர். கிராமங்களில் இன்றும் மாவு அறைக்கும்போதும், வீட்டு வேலை செய்யும் பொழுதும் தங்களது வேலைச் சுமையை மறந்து பாடும் பாட்டுகள் ஜனாபாயின் பாடல்கள்.
ஞானேஸ்வர், நாம்தேவ், ஏகநாத், துக்காரம் இவர்கள் வரிசையில் ஜனாபாயும் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். வர்காரி என்ற பிரிவில உள்ள ஜனங்கள் அவர்களுடன் ஜனாபாயை சேர்த்து பெருமையாகப் பேசுவர்.
கோதாவரி நதிக்கரையில் அமைந்த கங்காகெட் என்ற குக்கிராமத்தில் மிகவும் எளிமையான குலத்தில் பிறந்தவர். கடவுளுக்குத் தொண்டு புரியும் மனிதர்களுக்கு தொண்டு செய்வதை ஒரு உன்னதமாகக் கருதும் தாமா-கருண்டா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். இவர்கள் மூவரும் பண்டரிபுரம் விட்டலனுக்கு சேவை செய்வதை தங்களது மூச்சாக எண்ணியவர்கள். தாய் கருண்டா இறந்தபின், தந்தை தாமா, ஜனாபாயை தாமாசேத் ஷிம்பி என்பரின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாகச் சேர்த்தார். ஷிம்பியின் மகன் நாம்தேவ், விட்டலனின் பரம பக்தன். ஜனாபாயோ அவர்களுக்கு சேவை செய்வதில் தனது முழுமனதையும் செலுத்தி இறைவனைக் கண்டவள்.
“தலித கண்டித துஸா காயீன் அனந்த
மாவு அரைக்கும் பொழுதும், குத்துவதும் போதும் உன் நாமத்தைத் தவிர மற்றவற்றை பேசேன் என்பது அவளது குறிக்கோள். அவள் இயற்றிய அபங்கம் “விட்டுமாச்சா லெங்குரவாளா ஸாங்கே கோபாலான்சா மேளா எல்லோராலும் இசைத்துப் பாடப்படும் முக்கிய அபங்கமாகும். மிகவும் எளிய முறையில் மராத்தி மொழியில் பாமர ஜன்ங்களும் பாடும் பாட்டாக அமைந்துள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்ட அபங்கங்கள் நம்மிடையே பாடப்பட்டு வருகிறது.
ஒரு சமயம் பண்டரிநாத விட்டலன் தனது கோவிலுக்குள் தனிமையாக உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு வந்த ஞானேஸ்வரர் வருவதைப் பார்த்துவிட்டு தான் எழுதிய ஓலைச்சுவடியையும், எழுத்தாணியையும் தன் ஆசனத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டார். இந்த பக்தனைப் பார்த்து ஆண்டவனே ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று நினைந்து, விட்டலனை வினவுகிறார். “ப்ரபோ ஏன் இந்த திருட்டுத்தனம் உம்மிடத்தில் என்று உரிமையாகக் கேட்கிறார். “எந்த ருக்மிணிக்குப் பத்திரம் எழுதுகிறீர்என்றார்.
“இது ஜனாபாயின் பாடல்கள். அதனை எழுதிவைத்துக் கொண்டு பாடுகிறேன் என்றார். “நீர் ஏன் எழுதுவானேன் என்றார் ஞானேஸ்வர். “அவள் எப்பொழுதும் நாமதேவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் என்னை மனதில் கொண்டு இந்த அருமையான பாடல்களைப் பாடுகிறாள். அவளுக்கு இதனை எழுத அவகாசம் இல்லை. அதனால் தான் நான் எழுதிவைத்து, அதனைப் பாடி மகிழ்கிறேன் என்றார். “ருக்மணி தொடங்கி பத்ரா வரை எட்டு பட்டமகிஷிகள். மேலும் ஒரு ராதை. மற்றும் எண்ணிலடங்கா அப்ஸர ஸ்த்ரீகளான கோபிகைகள் என்று பெரிய சமூகம் உன்னை ஆராதிக்கும் பொழுது, இவளிடம் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை, அனுதாபம், காதல் என்று கேட்கிறார்.
“அன்பரே! அவளுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. ஜன்ம ஜன்மமாய் வந்தது. அவள் என்னுடைய நித்ய தாஸி. க்ருஷ்ணாவதாரத்தில் குப்ஜையாக் இருந்தபோது அவளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இங்கு வந்துள்ளேன் என்றார்.
இதைக் கேட்டதும் ஞானேஸ்வர் கண்ணீர் மல்கி விட்டலனுடன் அவளையும் சேர்த்து ஆராதிக்கிறார். ஆனால் தனது விட்டலன் தன்னிடமிருந்து விலகி இருப்பதாக ஓரத்தில் ஒரு தாபம். 
ஒரு சமயம் ஜனாபாய் தட்டிப் போட்டிருந்த வறட்டிகளை பக்கத்து வீட்டுப் பெண் திருடிக் கொண்டு போய்விட்டாள். ஜனாவிற்கு துக்கம் தாளவில்லை. பரமபாகவதர் வீட்டுக்கென்று தட்டிய வறட்டியை லௌகீகர்கள் கொண்டு போய்விட்டனரே என்று புலம்பினாள். அதற்கு பாகவதர்கள் போனால் போகட்டும் என்றனர். அனால் அவள் விடுவதாய் இல்லை. ஒவ்வொரு வறட்டியையும் நான்விட்டலநாமா கீர்த்தனத்துடன் அல்லவா தட்டியுள்ளேம் என்றாள். உடனே பாகவதர்களும் அடுத்த வீட்டுக்குப் போய் அங்குள்ள உன் வறட்டிகளைப் பொறுக்கியெடுத்துக்கொள் என்றனர். ஒவ்வொறு வறட்டியாக தட்டிப் பார்த்து எது “விட்டல் என்ற நாம கோஷத்தோடு இருந்ததோ அதனை மட்டும் பொறுக்கி எடுத்துவந்தாள். அவள் பாடிய விட்டல நாமத்தை நானும் பாட இசைந்தேன். முடிந்தவரை பாடியுள்ளேன். விட்டலனின் அருள் கிடைக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

Wednesday, November 6, 2013

MANJUTHARA-21.ASHTAPATHI

21வது அஷ்டபதி
மஞ்ஜுதர குஞ்ஜதள கேளி ஸதனே
இந்த அஷ்டபதி கண்டா ராகத்தில் அமைந்துள்ளது. நான் சிறு ப்ராயம் முதல் பல பஜனைகளில் கேட்டவிதம் ஆஹிரி கலந்த கண்டா. பல புத்தகங்களை படித்துப்பார்த்ததில் குழப்பம் அதிகரித்ததே தவிர ஒரு தெளிவு கிடைக்கவில்லை. திரு. TRS அவர்கள் Music Academyல் நடத்தி உரையாடலின் சாராம்சத்தை ஒரு பத்திரிகையில் படித்தேன். அது பின் வருமாறு:
Mr.T.R.Subramanian was also hugely impressed by the high level of attainment of the galaxy of musicians/ musicologists who had gathered at the Music Academy to listen to him. He also got a taste of the rare pleasure of listening to comments by members of the expert committee, when Prof. TR Subramaniam rose to repeat Ravikiran’s comments, apparently not having heard the Chitravina maestro. (Ravikiran cited the example of the raga Ghanta as a compound of numerous ragas like Todi, Dhanyasi and so on, responding to Deepak Raja’s question whether compounds of more than 4 or 5 ragas could hold their own as independent entities).
TRS also repeated a delightful anecdote he related last year after S Sowmya’s lec-dem on the raga Ghanta.  According to the story, TRS’s course mate at the Music College, Sri.Ramnad Krishnan once said that Ghanta was nothing but Dhanyasi sung imperfectly. To TRS’s query on how to sing Dhanyasi wrongly, Krishnan gave a tongue-in-cheek reply again: “Is it difficult for us musicians to get a raga wrong?”
திரு.திருவனந்தபுரம் வெங்கடராம பாகவதர் ஒரு அபூர்வ வீணை வித்வான். ஆல் இந்தியா ரேடியோ நிலையத்தில் “A TOP“ வீணை வித்வானாக விளங்கும் இவர் திரு. K.S.நாராயணஸ்வாமி அவர்களின் ப்ரதம சிஷ்யர். திரு வெங்கடராமன் அவர்கள், திரு.ரமணி அவர்கள், திரு லால்குடி ஜயராமன் அவர்கள் வீணா, வேணு, வயலினில்  முதன் முதலில் இசைத் தட்டுகளை வெளியிட்டனர். திரு வெங்கடராமனின் ப்ரதம சிஷ்யை, வீணை விதூஷி திருமதி.சேஷா நம்பிராஜன்,  Tirunelveli AIR  நிலய வீணை வித்வானாக (B ) பரிமளிக்கிறார். கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற இவர் ஏணி போல் பல வித்வான்களையும், மேடைப் பாடகர்களையும் உருவாக்கி மகிழும் ஒரு உன்னத கலைஞர். தேர்ச்சி பெற்ற இவரை அணுகி இந்த ராகத்தில் பாடுவதற்கு உதவி நாடினேன். அவர் எனக்கு, பல புத்தகங்களிலிருந்து கண்டா ராகத்திற்கான குறிப்புகளை எடுத்து அனுப்பியுள்ளார். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்தப் பாடலைப் பாடினதில் குறைகள் ஏதாவது இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. பாராட்டுதலை மனது நிறைவுடன் எனக்கு உதவியவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பாடலைப் பாடுவதற்கு எனக்கு ஒரு முன்மாதிரி இசைத் தொகுப்பு தேவையாக இருந்த்து. அதற்காக டாக்டர்.பாலமுரளீ க்ருஷ்ணாவின் உத்சவ ஸம்ப்ரதாய கண்டா ராக கீர்த்தனை இசைத் தொகுப்பிலிருந்து, சரணங்களை இணைக்கும் இசையாக எடுத்து கையாண்டுள்ளேன். 

Tuesday, November 5, 2013

WALKING CHILD WANTS TO LEARN CRAWLING; WHY? READ THE TOPIC "THE NEW SCIENCE OF MAN"- AN EYE OPENER!




நடக்கத் தெரிந்த குழந்தை தவழக் கற்றுக் கொண்டதாம், தாய் செய்த தவத்தாலே. இது ஒரு பழய பழமொழி. நடக்க ஆரம்பிக்கும் பருவத்தில் குழந்தை ஒன்று இருக்கும்போது, அந்தத் தாய்க்கு இன்னொரு குழந்தை பிறந்ததாம். புதிதாகப் பிறந்தக் குழந்தையை எல்லோரும் அள்ளி எடுத்துக் கொஞ்சும் போது, தாய் அதனை எடுத்து அரவணைத்து பாலூட்டுவதையும் முதல் குழந்தை பார்க்கிறது. 
அந்த அன்பிற்கு ஏங்கி இதுவும் அழுது அடம் பிடித்து தனது நடவடிக்கைகளை மாற்றி அவளது கவனத்தை தன் பால் ஈர்க்கப் பார்ப்பது போல, நம்மிடையே பலர் இவ்வாறு நடப்பது இயல்பு.  எல்லோருடைய வாழ்க்கையுமே முதல் இடத்தை நோக்கி நகர்வதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். இதனால் தான் ப்ரச்சனை உருவாகிறது. அதில் ஒரு ப்ரச்சனை தான் நம் ஆரோக்யத்தை நாமே பாழ்படுத்திக் கொள்வது.
நம்மில் ஒருவருக்கு ஒரு சின்ன உடல் உபாதை வருகிறது. உடனே நம் வீட்டில் உள்ளோர் நம்மை நன்கு கவனிக்கின்றனர். நம் அலுவலகத்திலும் அந்த சமயம் நமக்கு உதவுகின்றனர். இந்த அதீத கவனிப்பு குறைந்துவிடுமோ என்று அஞ்சி நம்மில் பலர் “ஏதோ பரவாயில்லை. இன்னும் பூரண குணம் அடையவில்லை என்ற ஒரு பொய்யைச் சொல்லி மற்றவர் கவனத்தை ஈர்த்து நம் உடல் நலனை இன்னும் கெடுத்துக் கொள்கிறோம். 
திருடன் ஒருவன் திருடப்போன இடத்தில் மாட்டிக்கொள்ள, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறான். ஒரிட்ததில் சிலர் குளிர்காய மூட்டிய அடுப்பு அணைந்து சாம்பல் குவியலாக் இருக்கிறது. ஓடினவன் அந்த சாம்பலை உடல் முழுவதும் பூசி, அந்த மரத்தடியில் உட்கார்ந்து ஒரு முனிவரைப் போல சிவநாமம் சொல்லி மனதில் நடுங்கிய வண்ணம் உட்கார்ந்தான். தேடி வந்தவர்கள் இவனை நிஜ சாமியார் என்று நினைத்து விட்டு விட்டனர். அங்கிருந்து போக பயந்து மறுநாள் காலை வரை அதே போல் நடித்தான். மன நிம்மதி கிடைத்தது. ஒரு சிவனடியாருக்கான ஒரு மரியாதை கிடைத்தது. பிறகு நிஜமான அடியாராக மாறிவிட்டான்.
திருடனின் தவறான பாதை திசை மாறக் காரணம் அவனது மனம். அதே மனம் தான் பூரண குணம் அடைந்தவன் பிறர் கவனத்தை ஈர்க்க உடல் நலனை கெடுத்துக் கொள்கிறான். அதுவும் அதே மனம் செய்யும் தவறு. நாம் எதைத் தொடர்ந்து நினைக்கிறோமோ நாம் அதுவாக மாறி விடுகிறோம்.
நம் மனதே ஒரு நல்ல மருந்து. நம் உடலே நம்மை காப்பாற்றி நம்மை சரி செய்து கொள்கிறது. எனது நண்பர் ஒருவர், அறுபது வயதைத்தாண்டியவர், இதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளவர், அதற்கான அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துக் கேட்கச் சென்றவரை பெரிய மருத்துவமனையில் அவரை வலுக்கட்டாயமாக அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மற்றுமொறு நல்ல நாள் பார்த்து வருகிறேன் என்று வெளியே தப்பி வந்து, ஹெக்டேயிடம் சென்று மாற்று சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார். மனதில் உறுதி வேண்டும். நல்ல மனம், சஞ்சலமற்ற மனம் நம்மை நல் வழிக்குக் கொண்டு செல்லும்.

Monday, November 4, 2013

Gujarati Vikram Samvat 2070 Begins

தீபாவளி என்றவுடன் நாம் அறிந்த இதிஹாஸபுராணம் நாராயணன் நரஹாஸுரனை வதம் செய்த நாள் என்று. எனது நண்பர் அலுவலகத்தில் தீபாவளிக்கு முதல் நாள் பல இதிஹாஸ புராணங்களை படங்களுடன் வண்ணமயமாக சித்தரித்து அதற்கு பரிசுகள் வழங்குவது வழக்கமாம். ஒருவர் ராமாயணகாலத்தில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினார்கள் என்று சித்தரித்தாராம். மற்றவர்கள் நகைத்தார்களாம். தீபாவளி க்ருஷ்ணாவதாரதில் தான் நடந்த்து. எந்தக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும். இவருக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா என்று வினவினார். தீப ஒளிப் பண்டிகையே தீபாவளி என்பர். ராமர் வனவாசம் முடித்து நாடு திரும்புகிறார். ராமர் இல்லாத அயோத்தியில் மக்கள் வசிக்க விரும்பாது நந்திக்ராமத்தில் இருந்த்தாக ஒரு செய்தி. ராமர் வனவாசம் முடிந்து பட்டிணப் ப்ரவேசம் செய்த நாளன்று தீப ஒளியால் அலங்கரித்து கொண்டாடினார்கள். அந்த நாளே தீபாவளி என்றார். சொல்லும் விதம் நன்றாக உள்ளது, சொல்லிய செய்தி மிகவும் கோர்வையாக உள்ளது. புதிய வ்ருத்தாந்தம்.
எனது உறவினர் ஒருவர் இன்றய நாளின் மகத்வத்தை வட நாட்டு பஞ்சாங்கத்தில் எவ்வாறு சொல்லுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். துலாமாத அமாவாசை மறுநாள் க்ருஷ்ணர் கோவர்தன மலைக்கு பூஜை செய்து இந்திரனின் கோபத்திற்கு உள்ளாகி கோவர்த்தன் மலையை தன் சுண்டு விரலால் தூக்கி கோபர்களை காப்பாற்றின புராணத்தை இன்றும் என்றும் சொல்லுவர்.
இன்றுதான் மஹாபலி பாதாள உலகத்திலிருந்து வெளியே வந்து பூலோகத்தை கண்ட நாள். இது விஷ்ணு அவருக்குத்தந்த வரம். அதனை பாலிபத்யாமி என்பர்.
நாம் எவரும் அமாவாசை ப்ரதமை தினத்தில் எந்த சுபகாரியத்தையாவது செய்வோமா? ஆனால் விக்ரமாதித்ய மஹாராஜா இன்றுதான்  முடிசூடினான் என்றும் ஒரு செய்தி உண்டு.
இன்று தான் குஜராத்திய மாநிலத்தின் விக்ரம ஸம்வாத் 2070 தொடங்குகிறது
நாம் கணினியின் வலைத்தளத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு எளிதில் செய்திகளை சேகரிக்க உதவுவதற்காக!