நம்மில் பலர் அறுபது எழுபது பிராயம்
தாண்டியவர்கள், இன்று காலை எங்கு சாவியை வைத்தோம் என்பதை மறந்து
விடுவர். அதேபோல் இன்று காலை நாம் யாருடன் பேசினோம் என்பதும்,
அவர் பெயர் என்ன என்பதையும் மறப்பதற்கு ப்ரமயங்கள் உள்ளன. ஆனால்
அவர்களது 10-15 வயது பிராயத்தில் நடந்த பல நிகழ்வுகளை அவர்களால் மறுபடியும் அவர்களது
நினைவிற்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு நானும் என்னுடைய இளம் பிராயத்தில் நடந்த நிகழ்வுகளை
மனதில் கொண்டு வர எத்தனித்தேன். பல சமயம் நமது சிந்தனையில் திரைப்படம் பார்ப்பது
போல பல நிகழ்வுகள் நம் கண்முன் வந்து நிற்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு.
அதனைக் காண்பதற்கு இந்த பாடல் ஒரு
காரணமாய் அமைந்தது.
எங்களது தகப்பனார் திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியில் 1910-20 ஆண்டுகளில்
படித்தவர். பழைய மாணவர் என்பதால் 1960 வது வருடம்
பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்ற “கண்ணன் விடு தூது” என்ற ஒரு நாடகத்திற்கு பாடலை எழுதி, இசையும்
அமைக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் அவர்க்கு அளித்திருந்தது. பள்ளியின் சமஸ்க்ருத ஆசிரியராய் இருந்த
திரு தாமல் ஸ்ரீநிவாசன் என்பவர் நாடகத்திற்கு வசனம் எழுதி கண்ணனாய் நடித்தார். கண்ணனை சகாதேவன் கட்டுவதாய் உள்ள ஒரு அறிய காட்சியை, நாடகத்தில் சேர்க்க ஆசைப்பட்ட எனது தகப்பனார், அதற்கு
ஏற்ற ஒர் பாடலை எழுதி, அதற்கு இசையையும் அமைத்தார். அதனை எனது தமயன் திரு திருவையாரு க்ருஷ்ணன் அவர்கள்
அன்று பாடி எல்லோரையும் வசப்படுத்தினார்.
நாராயணீயத்தின் 100 அங்கங்களின் சமஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழில்
மொழி பெயர்த்து பல பாடல்களை இயற்றியுள்ளார். அதில் வரும் ராமாயண காவியத்தை எனது ஒரு
பதிவில் பாடியுள்ளேன். பால கண்ணனை யசோதை எவ்வாறு அனுபவித்தாள்; மற்றும் பல கண்ணனின்
லீலைகளை பல பாடல்களாய் பட்டத்ரி அனுபவித்தது போல இவரும் அனுபவித்து, அவைகளை இந்த நாடகத்தில்
சேர்த்திருந்தார்.
நாராயணீயத்தில், பாகவதத்தில் இல்லாத ஒரு காட்சியை எவ்வாறு அவர் இதில்
இணைத்தார் என்பதை சிறிதே ஆராய்ந்தேன். இணைய தளம், எளிதில் அறிய பழைய புத்தகங்கள் கிடைப்பது
என்பது போன்ற பல வசதிகள் இல்லாத அந்த நாட்களில், எவ்வாறு இந்த சிறந்த காட்சியை, எனது
தகப்பனார் சித்தரித்தார் என்று சிறிதே வியந்தேன்.
வில்லி பாரதத்தின் ஒரு ஈர்ப்போ என்று நினைத்தேன்.
முன்ன நீ கூறியவை எல்லாம்
முடித்தாலும்
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு
என மாயன்
உன்னை நீதானும் உணராதா
உன்வடிவம்
தன்னை நீ காட்டத் தளைந்திடுவன்
யான் என்றான்
மாயவனும் அன்பன்
மனமறிவான், கட்டுக என்று,
ஆயவடிவு பதினாறு ஆயிரம்
கொண்டான்
தூயவன், மூலமாம் தோற்றம் உணர்ந்தே, உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால்
பிணித்தான்