Wednesday, December 19, 2012

Aazhimazhai Kanna 4- Tiruppavai (திருப்பாவை 4 -ஆழி மழைக்கண்ணா)


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோள் உடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


Tuesday, December 18, 2012

Bhuthana, Is she a demon?

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிஎன்ற பாசுரத்தைப் பாடியவுடன், நான் படித்த ஒரு சுவையான அவதார மகிமையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இதோ அந்த செய்தி.

அகிலம் என்ற நாடக மேடையை நிர்மாணிக்கும் இறைவன், அதற்கான கதா பாத்திரங்களை முதலில் உருவாக்கிய பின் அந்த அரங்கில் ப்ரவேசிக்கிறார்.  ராமாவதாரத்திற்கும், க்ருஷ்ணாவதாரத்திற்கும் உதவுமாறு, ப்ரம்மனின் அம்சமான ஜாம்பவானை வாராஹாவதாரதிலேயே கொண்டு வந்து நிறுத்தி உலகுக்கு அந்த சிரஞ்சீவியை அறிமுகப்படுத்தினார்.
க்ருஷ்ணாவதரத்தில் ப்ரவேசிக்கும் பூதனை என்ற அரக்கி ஏன் உருவானாள்? எப்படி உருவானாள் தெரியுமா?

மஹாபலியின் கல்யாணம் ஆன பெண் நிர்மலா தன் தகப்பனார் செய்யும் யாகத்திற்கு வருகிறாள். யாகசாலைக்கு வருகை தரும் வாமனனாக நடந்து வரும் அந்த பரந்தாமனின் முக காந்தியையும், ரூபத்தையும் பார்த்து, இவனைப் போல் தனக்கு ஒரு மகன் பிறந்து, அவனை மடியில் கிடத்தி ஸ்தன்யபானம் செய்ய வேண்டும் என்று நினைத்தாள். அந்த மாயாவி ததாஸ்து என்று வரம் அருளினார். மஹாபலியிடம் மூவடிமண் வேண்டிப் பெற்று தாரை நீர் நிலத்தில் விழுவதற்கு முன்
“ஆழி எழ, சங்கும் வில்லும் எழ,
திசை வாழி எழ, தண்டும் வாளும் எழ,
அண்டம் மோழை எழ, முடி பாதமெழ
அப்பன் ஊழி எழ உலகம் உண்டவூணே
என்று வளர்ந்து மஹாபலியை ஆட்கொண்ட்தோடு அல்லாமல், அங்கு வந்த மஹாபலியின் மகன் நமுசி வாமனின் காலைப் பிடித்து, பரந்தாமன் அவாமனனாகுவதைத் தடுக்க, நமுசியையும் தடுத்தாட் கொண்ட மாயைக் கண்டு, துணுக்குற்ற நிர்மலா “உன்னைப் பிள்ளையாகப் பெற்று ஸ்தன்யபானம் செய்ய நினைத்தேன். மாறாக உனக்கு விஷம் அல்லவா கொடுக்க வேண்டும் என்று அறற்ற அவாமனன் ததாஸ்து என்றான். க்ருஷ்ணாவதாரத்திற்கு ஒரு கதா பாத்திரத்தை அப்பொழுதே உருவாக்கி விட்டான். அவள் தான் பூதனை. என்னே அவன் மாயம் !

Monday, December 17, 2012

திருப்பாவை 03 - ஓங்கி உலகளந்த


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
கோதை நாச்சியார் ஏன் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களைப் பாடாமல், த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள்? இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!) என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! காரணம் இருக்கிறது! ஸ்ரீராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன், கம்சன் தவிரவும் பல அசுரர்களை பரமன் வதம் செய்கிறார். கண்ணன் மேல் மையல் கொண்டிருந்தாலும், அன்பே உருவான பூமிதேவியான (பிரேம சொரூப ஜகன்மாதா!) ஆண்டாளுக்கு (மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது!

Sunday, December 16, 2012

திருப்பாவை 02 - வையத்து வாழ்வீர்காள்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!

மாணிக்கவாசகர் வாயில் கதவை தட்டமாட்டாரோ தலைவா?


எனது ராகஸ்ரீ ப்ளாகில் தனுர் மாத தொடக்கத்தைக் குறித்து திருப்பாவைப் பாடல்களை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்க முதல் பாடலை பதிவு செய்தேன். திரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், திரு பால்காட் நாராயண ஸ்வாமி, திருமதி எம்.எல்.வசந்தகுமாரி என்று சங்கீத உலக ஜாம்பவான்கள் பாடி கர்நாடக பூங்காவில் எல்லோரும் அனுபவித்திருக்கும் தருணத்தில் என்னுடைய குழந்தைத் தனமான முயற்சியையும் பாராட்டி எழுதிய அன்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்; வணக்கங்கள்.
ஒரு அன்பர் எனக்கு எழுதியுள்ள வாசகம் மாணிக்கவாசகர் வாயில் கதவை தட்டமாட்டாரோ தலைவா? அவரின் திருவெம்பாவையையும் சேர்த்து கேட்க ஆசைப்படுகிறோம் சிங்கன்ஜீ “. அந்த அன்பர் ஒரு நடராஜன். தில்லை நடராஜன் கட்டளை என்று கொண்டு திருவெம்பாவையை பாட விழைகிறேன்.
திருப்பாவை, திருவெம்பாவை ப்ரபலமான வரலாறு எப்பொழுது, எப்படி என்பதையும் அந்த அன்பர் எனக்கு ஒரு சுவையான செய்திமூலம் சொல்லியிருந்தார். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"அந்த ஆச்சி என்ன பாடிக் கொண்டிருக்கா தெரியுமா?"
மஹா பெரியவாளின் கேள்வி; அது தெய்வத்தின் குரல்.


Margazhi Thingal - Tiruppavai 01


இன்று நந்தன வருட தனுர் மாதம் ஆரம்பம். 
மார்கழி மஹோத்ஸவம் இன்று தொடக்கம். 
ஆண்டாளின் முதல் பாசுரத்துடன் தொடங்கி நாமும் கொண்டாடலாம்.
01.திருப்பாவை
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.


Friday, November 30, 2012

Dhaththathreya - மும்மூர்த்திகளின் அவதாரம்


திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் தத்தாத்ரேயரின் அவதாரத்தை மிகவும் அருமையாக தனது வலையில் கொடுத்துள்ளார். இதனை படிக்கும் பொழுது, தத்தாத்ரேயரை நேரே பார்க்கும் ஒரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. அந்த தொகுப்பினை PDF வடிவில் கொடுத்துள்ளேன். நான் மகிழ்ந்தது போல் நீங்களும் மகிழலாம்.