Friday, December 28, 2012

திருப்பாவை 11.கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 10.நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

அபலையின் மானம் காத்த மகாபெரியவா

திரு.நடராஜன் எனபவர் எங்களது குருநாதரின் முக்கிய சீடர்களில் ஒருவர். அவர் பல நல்ல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். மகா பெரியவாளுடன் சேர்ந்து இருந்த பல அனுபவங்களை பலர் எழுதுவதை தொகுத்து வெளியிடுவதை அவர் மின் அஞ்சல் மூலம் அனுப்பினதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். இந்த பதிவிற்கு திருமதி வசந்தகுமாரி அவர்களின் உகபோகா மிகவும் பொருத்தமானது. அதனையும் உங்களுடன் சேர்ந்து கேட்டு மகிழ்கிறேன்.


கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.
எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார்.  யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.  பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்தாடா……….கொழந்தே! இங்க வா”  சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!
ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!
“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை.   அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார்.  அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

திருப்பாவை 9.தூமணிமாடத்து


தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்


மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?


மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

ஏமப் பெரும்துயிலில் இருக்கும் தோழியின் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, ஆண்டாள் கோபத்துடன், "உன் மகள் தான் உமையோ?  அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்கிறாள். மேலும் கோதை நாச்சியார், பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று "மாமாயன் மாதவன் வைகுந்தனென்று" என்றனள். மாமாயனின் மாயத்தை புரிந்து கொண்டு நம்மாழ்வார் தம் பாசுரத்தில் "அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" என்று அருளியுள்ளார். வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! ஏமம் என்ற சொல்லுக்கு இரவு,  இன்பம்,  உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று பல அர்த்தங்கள் உண்டு.

திருவெம்பாவை 02 பாசம் பரஞ்சோதி



பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2) 

ஆருத்ரா தரிசனம்

தனுர் மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் நாள் இன்று. ஹரனை முதன்மயாக தொழுபவர்கள் வ்யாக்ரபாதரும் ஆதிசேஷரும் ஆவர். அவர்கள் இருவர் முன் சிவன் ஆடிய தேஜோமயமான சிவ தாண்டவத்தை ருத்ர கணங்கள், பூதகணங்கள் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலர் கண்டு ரசித்த நாள் இன்று. மாணிக்கவாசகருக்கு இருபது திருவெம்பாவையையும் பாடிமுடித்தவுடன் அவருக்கு தரிசனம் தந்த நாள் இன்று. மேலும் பார்வதி சிவனை நினைந்து தவம் இருந்து அவரது தரிசனம் கிடைத்து, ஆட்கொண்ட நாள் இது. ஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவத்தை PDF வடிவத்தில் அமைத்துள்ளார்கள். 

Thursday, December 27, 2012

திருவெம்பாவை 01.ஆதியும் அந்தமும்


மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
 ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)
சங்கீத வித்வான்கள் விதூஷிகள் ஓதுவார்கள் கானாமுதமாய் தந்த இந்த திருவெம்பாவையை நானும், உட்பொருளை ஓதி உணர்ந்து பாட விழைகிறேன்.