கடவுள் எங்கே உள்ளார்?
விக்ரஹத்திலா அல்லது அங்குள்ள ஸாந்நித்யத்திலா ?
நாம் எல்லோரும் ஆலயத்திற்குச்
சென்று ஸ்ரத்தையாக பகவானை தரிசிக்கிறோம். அங்குள்ள மூர்த்தியில் பகவான்
ப்ரத்யக்ஷம் என்று சிலரே அனுபவிக்கின்றனர். ஏனையோர் அதனை, தினம் நாம் செய்யும் பல
செயல்களில் ஒன்றாக நினைக்கிறோம். இன்றய நிலைப்பாட்டில் நம்மில் பலர் ஆலய
நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சேவார்த்திகள் என்ற பலதரப்பட்ட வகைகளில் உள்ளோம். இந்த
மூன்றுதரத்தாரும், உள்ளே இருப்பது கடவுள்தான் வெறும் விக்ரஹம் இல்லை என்று
நினைத்தால், நிர்வாகிகள் கோவிலுக்கு வரும் செல்வத்தை ஒழுங்காகச் செலவிடுவர்.
அர்ச்சகர்களும் ஸ்ரத்தையாக பூஜை செய்வார்கள். சேவார்த்திகளும் கோவிலுக்குச் சென்று
வம்பு பேசுவதைத் தவிர்ப்பார்கள். நடைமுறையில் மூவரும் தவறு இழைக்கின்றனர். ஒருவர் செய்யும்
தவறுக்கு மற்றொறுவரைக் காரணம் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.
பகவான் ஸ்ர்வ வ்யாபி.
அங்குள்ள விக்ரஹத்தில் அவரது ஸாந்நித்யம் ஏற்படுகிறது. நாமும் ஹிரண்யகசிபுவைப்
போல், இங்கே அந்தக் கடவுளை வரச் சொல் என்று நாத்திகம் பேசுதல் எவ்வளவு அறியாமை.
அந்த ஸாந்நித்யம் ஆராதிப்பவரின் ஸ்ரத்தையையும் பக்தியையும் பொருத்தது. அவர்களது
உதாஸீனத்தினால், நம்முடைய பெரியவர்களால் உண்டாக்கப்பட்ட ஸாந்நித்யம் அழிகின்றது.
ஆகையால் வெறும் விக்ரஹமாய் மாறிவிடுகிறது. சிலை திருடுபவர்கள் அந்தச் செயலை நன்கு
செய்து, அதனை ஒரு காட்சிப் பொருளாய் மாற்றி இருக்கும் இடத்தை மாற்றுகின்றனர் .
சிக்கல் சிங்காரவேலனின்
க்ஷேத்திரத்தில் ஒரு வயதான மாது ஆலயதரிசனத்திற்கு வரும் ப்ராமணர்களுக்கு தினமும்
போஜனம் செய்வித்து வந்தாள். அந்த மாதுவிற்கு இருந்த ஒரே சொத்து என்பது அந்தப் பெரிய
சத்திரம் போன்ற வீடு ஒன்றுதான். அவர்களது நற்பணியைப் பாராட்டி அந்த ஊரிலுள்ள வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அவர்களால் முடிந்த உதவியை அந்த
மாதுவிற்குச் செய்து, ப்ராஹ்மண அன்னதானம் தினமும் நடந்துவர ஏதுவாய் இருந்தனர். ஒரு
நாள் போஜனத்திற்காக எல்லா ப்ராஹ்மணர்களையும் உட்கார வைத்து இருந்தார். திடீரென்று
மணி அடிப்பதை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் ஒடினாள். “என்ன செய்தாய்” என்று ஒரு அதட்டல். ஆவேசமான் ஒரு பேச்சு.
அர்ச்சகர் பயந்துவிட்டார். "குளித்த ஜலத்தை சாப்பிடுவாயா" என்று சிங்காரவேலன்
கேட்கிறார் என்று வினவி அந்த மூதாட்டி அந்த அர்ச்சகரை அதட்டினாள். அர்ச்சகர் தன்
தவற்றை ஒப்புக் கொண்டார். அபிஷேகம் செய்த பாலை நிவேதனத்திற்கு வைத்திருந்தார். அந்த மூதாட்டிக்கு அங்குள்ள மூர்த்தி ஸாந்நித்யமுடையது மாத்திரமல்ல பேசக்
கூடயதாகவும் இருந்தது. ப்ரதி தினம் ஆராதனை செய்யும் அர்ச்சகரிடம் இல்லாதது அந்த
மூதாட்டியிடம் இருந்தது. இறைவனின் அந்த வாஞ்சை அவளுக்கு உண்டு என்றால் அந்த பக்தியே காரணம். அர்ச்சகர் நினைத்த்து ஒருவிக்ரஹமாய். அவள் நினைத்து ஆராதித்தது அந்த ஸாந்நித்யத்தை.
நம்பிக்கை என்பதை மூன்றாவது கையாக உணராவிட்டால்,
மனிதனுக்கு உள்ள இருகையும் உபயோகப்படாது. எல்லோரிடமும் நம்பிக்கை உள்ளது. மனிதனுக்கு
மனிதன் அந்த விகிதாசாரம் மாறுகிறது.
ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணம்
என்ற தொகுப்பிலிருந்து நான் படித்து அனுபவித்தது. தொகுத்து புத்தகவடிவில்
வழங்கியுள்ள நண்பர் சீதாராம ஸாஸ்த்ரி அவர்களுக்கு நன்றி.