நான் அறிந்தது திருமாலின்
அவதாரங்கள் மீனத்தில் தொடங்கி கல்கி வரை பத்து அவதாரங்கள் என்ற செய்தி. ஆனால்
ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டிப்பார்த்தால், ப்ருது மகராஜன் அவதாரத ரகசியத்தைப்
படித்தால், ப்ருது மஹாராஜன் திருமாலின் மற்றுமொருஅவதாரம் என்பது தெரியவரும்.
மேலும் பூமிக்கு ஏன் ப்ருத்வி என்ற பெயர் காரணம், ஜீவராசிகள் உற்பத்தி என்ற பல
அறிய செய்திகள் நமக்குத் தெரியவருகிறது. எவ்வாறு ப்ருது மஹாராஜன் பூமா தேவி என்ற
பசுவின் மூலம் உலக ஸ்ருஷ்டியை சம்பவித்தார் என்பது பாகவதத்லிருந்து நாம் அறியலாம்.
இந்தப் பதிவின் மூலம் ஹரியும்
ஹரனும் ஒன்றே என்றும், நாஸ்திகன் என்பனை எவ்வாறு அடையாளம் காணலாம். ப்ருது
மஹாராஜன் காலத்தில் எவ்வாறு, இந்திரனே நாஸ்திகனாய் இருந்துள்ளான் என்ற பல அறிய
செய்திகளைப் படிக்கலாம்.
ஆத்மானம்
யஜதி மகைஸ்த்வயி த்ரிதாமன்
ஆரப்தே
ஸத்தமவாஜிமேத யாகே
ஸ்பர்தாலு:
ஸதமக ஏத்ய நீச வேஷோ
ஹ்ருத்வாஸ்வம்
தவ தனயாத்பராஜிதோபூத்
யாகத்தால் ப்ரதானமாக
ஆராதிக்கப்படும் தேவதை ஸ்ரீமத் நாராயணன். வேறு யாராவது யாகம் செய்தால் ஸ்ரீமன்
நாராயணனை ஆராதிக்கலாம். இங்கு ஸ்ரீமன் நாராயணனே ப்ருதுவாக வந்து யாகம் செய்வதால்,
தன்னையே பூஜிப்பதாக நாம் சொல்ல முடியாது. ஒருவன் தனது பெயருக்கே மரியாதை நிமித்தம்
செய்வது போல் ஆகிவிடும். இங்கு த்ரிதாமன் என்று கூறுவதன் நோக்கம் ப்ரும்மா,
விஷ்ணு, சிவன் என்பதன் பொருள். ப்ருதுவான நாராயணன் த்ரிதாமனை பூஜித்து நூறாவது
அஸ்வமேத யாகத்தை செய்ய விழைந்தான்.
மாயை இந்த்ரனின் கண்களை மறைத்தது. ப்ருது யார் என்று அறியாமல் யாகக்
குதிரையைக் கவர்ந்தான். இந்த்ரன் பல வேஷங்களுடன் வந்து யாகக் குதிரையை களவாடினான்.
அந்த உருவங்கள் யாவையும் நாஸ்திக உருவங்களே. கருப்பு வஸ்திரம் நாஸ்திகனைக்
குறிக்கும். நானே எல்லாம் என்பவனே நாஸ்திகன். உடல், மனது முழுவதும் பலவிதமான
அகங்கார நோக்கங்கள். உடல் முழுவதும் எல்லாவித ஆசைகளுள்ள பலவிதமான கண்கள். இறைவனை
விட நான் மேலானவன் என்ற செருக்கு. இன்றும் நம்மிடயே நாஸ்திக பெருமக்கள் பலர்
உள்ளர். கருப்பு வஸ்திரம் தறித்த இந்நாஸ்திகர்கள் பிறர் அறியாவண்ணம் கடவுளை
தொழுபவர்கள்தான்
இக்கலியிலும் பக்தர்கள் மஹாவிஷ்ணுவை ஆராதிக்கும் பொழுது, மூவரில் ஒருவனே
என்பர். திருவஹீந்தபுரத்தில் உள்ள தேவநாதன் நெற்றியில் கண்ணும், தலையில் ஜடையுமுடன்
இருப்பது தெய்வங்களிடத்தில் ஒருவிதமான பேதங்கள் இல்லை என்பதே. மேலும் ராமன் சேது நிர்மாணத்தின் போது ஈஸ்வரனை
வணங்கிய பின் தொடங்குவது, தெய்வங்களிடையே பேதங்கள் இல்லை என்பதைக் குறிக்கும்.
மனிதர்களாகிய நம்மிடையே தான்
பேதங்களும், தான் என்ற உணர்வு. நாம் தான் உலகத்தை உய்விக்கின்றோம் என்ற மமதைகளெல்லாம்.
நம்மை சீரிய வழியில் கொண்டு செல்ல நம் முன்னோர் ஆராதித்த தெய்வங்களை இடைவிடாது
உபாஸித்து வருவதே சாலச் சிறந்தது. அதனால் தான் அன்றய காலம் தொட்டு குல தெய்வ
உபாசனையை கொண்டுள்ளார். நாமும் அதனை கடைபிடிப்போம். நம் சந்ததிகளுக்கும் போதிப்போம்.
திரு.M.D.ராமநாதன் அவர்களின் இந்தப் பாடல் மேலே சொன்ன
செய்திகளின் சாரமாய்த் திகழ்கிறது. வேகமாய்ச் செய்திகளைச் சொன்னால் நம்மவர்கள்
புரிந்துகொள்ளமாட்டார்களோ என்று அஞ்சி மிகவும் விளம்பகாலத்தில் நிறுத்தி நிதானமாக
அருமையாகப் பாடிய பாட்டு இது.