Friday, January 30, 2015

Tale of Tulasi & Jalandara

துளசி என்ற மருத்துவத் தாவரத்தின் வ்ருத்தாந்தம், தேவ லோகத்தின் அரசனான இந்திரனிடமிருந்து தொடங்குகிறது.
தன்னை எவரும் ஒருகடவுளாக மதிப்பதில்லை என்பதே இந்திரனின் கவலை, படைப்புக்கு அதிபதியான ப்ரும்மாவிடமும் காக்கும் கடவுளான நாராயணனிடமும் தனது வல்லமையைக் காட்ட சிறிதே அச்சம். அழிக்கும் தொழிலுக்கு அதிபதி சர்வேஸவரன் என்று தவறாக எண்ணி ஹரனை வம்புக்கு இழுக்க நினைந்து, தனது வல்லமையில் இறுமாப்பு அடைந்து கைலையை அடைந்தான். சர்வ வல்லமைப் படைத்த சிவபிரான் இதனை அறிந்து, இந்திரனுடன் சிறிதே விளையாட தனது திருவிளையாடலை துவக்கினார். 
தன்னுடைய சிறிய அம்சத்தை ஒரு காவலாளியாக மாற்றி இந்திரனை கைலாய வாயிலில் எதிர் கொண்டு அழைத்தார். வேகமாக உள்ளே செல்ல நினைத்த இந்திரனைத் தடுத்து அவனுடன் சண்டை சச்சரவுக்கு தொடங்கினார். தனது சக்தியில் செருக்கு கொண்ட இந்திரன் கைலாயத்தினுள்ளே செல்லமுடியாததால், கோபம் கொண்டு, தனது வஜ்ராயுதத்தை சிவனின் அம்சமான காவலாளியின் மீது ப்ரயோகம் செய்தான். சாம தான பேத தண்டம் என்ற நான்கும் அவரிடம் வேலை செய்யாத போது, சிவனின் சக்தியை உணர்ந்தான். அதற்குள் சிவனின் ரௌத்ரம் ஒரு தீப்பிழம்பாக வெளிவர, இந்திரன் தான் செய்த செயலுக்கு வருந்தி அஞ்சி, தனது தவறை உணர்ந்து அவர் பாத கமலங்களில் சரண் அடைந்தான்.
வேறு வழி இன்றி அந்த கோபக்கனலை வருணன் தனது சமுத்திர ஸாஹரத்தில் ஏற்றுக்கொண்டான். முடிவு ஒரு குழந்தை ரூபத்தில் ப்ரதிபலித்தது. நீரின் மேல் மிதந்துவந்த அந்தக் குழந்தை எல்லா லோகங்களும் கேட்குமாறு அலற ஆரம்பித்தது. அந்த அலறலை கேட்கச் சகியாது, ப்ரும்மா தனது கையில் எடுத்து சமாதானப்படுத்த முயற்சித்தார். அலறல் நின்றபாடில்லை. அதன் வடிவம் பெரிதாய் வளர்ந்து கையில் எடுத்து பராமரிக்கும் நிலையில்லாது கனத்தது. மேலும் ப்ரும்மாவின் முகத்தில் உள்ள ரோமத்தைப் பிடித்து இழுத்தது, அவர் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு “ஜலந்தரன்” என்று பெயரிட்டு அழைத்தார்.

நாட்கள் உருண்டோடின. ஜலந்தரன் வளர்ந்தான். அவன் பலமும் பெருமையும் வேகமாக வளர்ந்தன. தனது வலிமையால் யாரைத் தோற்கடிக்கலாம் என்ற நினைப்பும் கர்வமும் அதிகரித்தது. தேவர்கள் அவன் வலிமையைக் கண்டு தங்கள் பக்கம் சேர்க்க நினைத்தனர். அவனோ அஸுரர்கள் பக்கம் சேர யத்தனித்தான். அவன் திருமண வயதை அடைந்ததும், ராவணனின் தாய் மாமன் காலநேமியின் மகளான விருந்தாவை, மணக்க விரும்பினான். தேவ சபையில் உள்ள அப்ஸர ஸ்த்ரீகள் பொறாமைப் படும் அளவுக்கு அழகு பெற்ற அவள், விஷ்ணு பக்தை. அஸுர குரு சுக்ராச்சாரியார் ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.
வ்ருந்தாவின் விஷ்ணு பக்தியினால் பெற்ற யோக சக்தியினாலும், அவளது பதிவ்ருதை பெருமையாலும், ஜலந்தரனின் பலம் பிறர் அறியாவண்ணம் மேலும் பெருகிற்று. அஸுர குருவினால் அஸுரர்களுக்கு அரசனாக்கப்பட்டான். தேவேந்திரனின் இந்திரபதவியும் பறிபோனது. அவனது வஜ்ராயுதமே செயலற்றுப் போயிற்று. தேவர்கள் அனைவரும் செய்வதறியாது ப்ரும்மதேவரிடம் ஓடினர். ப்ரும்மாவின் தலைமையில் சிவனிடம் சென்று முறையிட்டனர்.
 
தேவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்ட சிவன் ஜலந்தரனிடம் பேச சென்றார். எனினும் ஜலந்தரன் வெளிப்படையாக  மிகவும் கர்வத்துடன் சிவனனை அவமதித்துவிட்டான். துறவியான உனக்கு மனைவி எதற்கு என்று சிவனை ஏளனம் செய்தான். மேலும் சிவனின் சமாதானப் பேச்சினை மறுத்துவிட்டான். தனது சக்தியால் சிவனையும் தேவ கணங்களையும் பூத கணங்களையும் மாயையால் கட்டி விட்டான்.
அத்துடன் நில்லாமல் கைலாயத்திற்கு சிவன் வடிவில் சென்று “நான் ஜலந்தரனை வென்று விட்டேன் என்று பார்வதியிடம் ஏளனமாகப் பேசினான். தனது ஞான த்ருஷ்டியால் எல்லாம் அறிந்த பார்வதிதேவி, தனது கத்தியை கையில் ஏந்தி ஜலந்தரனைக் கொல்ல யத்தனித்தாள். ஜலந்தரன், தான் ஏற்படுத்திய மாய சக்தியாலும், சிவனுடன் போர்புரிந்ததாலும், தனது சக்தி குறைந்ததை அறிந்த அவன் அங்கிருந்து ஒடிவிட்டான். விஷ்ணு அங்கு வந்த போது, தேவி பார்வதி மூலம் நடந்தது அனைத்தும் அறிந்தார்.  சிவபெருமானையே மாயையால் கட்டும் அளவுக்கு அவனிடம் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்று பார்வதி தேவி, நாரணனை வினவினாள்.  

ஜலந்தரன் ஒவ்வொருதடவை போர் செய்யும் பொழுதும், வ்ருந்தை என்னை பூஜித்தும், தனது பதிவ்ருதா சக்தியாலும் கணவனைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றான், என்று நாரணன் பார்வதியிடம் சொன்னார். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜலந்தரனின் தோல்விக்கு வழி செய்ய அங்கிருந்து சென்றார். மறுநாள் மறுபடியும் சிவனும் ஜலந்தரனும் சண்டையை தொடங்கினார்கள். வ்ருந்தாவும் தனது நாராயண பூஜையைத் தொடங்கினாள். அப்பொழுது நாராயணன் ஜலந்தரனின் ரூபத்தில் உள்ளே நுழைந்து விருந்தையிடம் “நான் இன்று சிவனை மறுபடியும் வென்று விட்டேன். வெற்றியைக் கொண்டாடுவோம் என்று சொல்லி அவளது பூஜையை நிறுத்திவிட்டார். அச்சமயத்தில் சிவன் ஜலந்தரனின் மார்பில் தனது சூலத்தைச் செலுத்த, ஜலந்தரன் போரில் இறந்தான்.

அந்த சமயத்தில் வ்ருந்தா ஏதோ ஒரு வினோதமான உணர்வை உணர்ந்தாள். தனது பதிவ்ருதா சக்தியினால் எல்லாவற்றையும் அறிந்தாள். அவள் முன் இருந்த நாராயணர் தனது சுய உருவிற்கு வந்தார். அவளது கோபதாபத்தைக் கண்டு திகைத்து நின்றார். “என் முன் கல்லாய் நிற்கின்றாய். ஏன் என் கணவனைக் கொல்ல இந்த நாடகமாடினாய்? ஆகவே நீ கல்லாய் மாறி பூ உலகில் இருப்பாய்” என்று பதிவ்ருதா சக்தியால் நாராயணரை சபித்தாள். விளைவு, நாம் எல்லோரும் பூஜிக்கும் சாளக்ராமக் கல்.
 “தவறுசெய்பனுக்கு உறுதுணையாக இருந்ததால் தான் உனக்கு இந்த துக்கம். மேலும் சிவபெருமானை நிந்தித்ததோடு நில்லாமல், பார்வதி தேவியிடம் தவறாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனர்த்தம்” என்று சொல்லி வ்ருந்தாவை நாராயணர் சமாதானம் செய்தார்.
 
இருப்பினும் தனது பக்தையை ஏமாற்றிவிட்டோமே என்று மனம் வருந்தினார். அதனைக் கண்ட சிவபெருமான் கூறலானார். “ஜலந்தரன் எனது அம்சம். அவன் என்னிடமே மறுபடியும் வந்துவிட்டான். பூவுலகில் கண்டகி நதியில் சாளக்ராமமாக உருவெடுத்து உம்மை பூஜிப்பவருக்கு அருள் வழங்குவீறாக. மேலும் வ்ருந்தா “துளஸீ” என்ற பெயரில் மருத்துவ தாவரமாக எங்கும் பரவி இருப்பாள். துளசி பூஜையில்லாமல் உம்மை பூஜிப்பவரின் பூஜை நிறைவு பெறாது” என்று சிவபெருமான் அருளினார். வ்ருந்தா ஜலந்தரனைப் பிரிந்து வருந்தியதை, தனது அடுத்த அவதாரமான ராமாவதாரத்திற்கு நாரணன் பயன் படுத்திக் கொண்டார். ராவணன் சீதையை சிறை எடுக்க, சீதையைப் பிறிந்து மன உளைச்சலையை அடைந்து அந்த அவதார மகிமையை எடுத்துறைத்தார்.

No comments:

Post a Comment