நாம ஸங்கீர்த்தனம் என்ற ஒரு யஞ்யத்தை, எந்த ஒரு ப்ரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒரு யாகமாய் 1955 முதல் இந்த நீண்ட 62 வருடங்கள் அனுஷ்டித்த ஒரு பாகவத ஸ்ரேஷ்ட்ரான திரு.ராமஸ்வாமி ஐயங்கார், திருவனந்தபுரம் நகரத்தில் ஒளிர்ந்த, நாம ஸங்கீர்த்தன ஆசாரியர், இந்த வருடம் செப்டம்பர் மாதம், 25ம் தேதி திங்கட்கிழமை அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.
எப்பொழுதும் நாமதேவ், முக்தாபாய், ஸோபன், நிவ்ருத்தி, ஞானேஸ்வர், துக்காராம் என்று. இவர்களது பெருமைகளைச் சொல்லி எப்பொழுதும் அபங்களைப் பாடிக் கொண்டிருந்த ப்ரும்மஸ்ரீ திரு.ராமஸ்வாமி ஐயங்கார், அந்த ஸந்த்துக்கள் சமூகத்தில் ஒன்றானார்.
ஏப்ரல் 5, 1925ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவில் பிள்ளையார்குளம் என்ற ஸ்தலத்தில் ஸ்ரீமான் அடைச்சாணி வானமாமலை ஆச்சாரியருக்கும், திருமதி சேஷம்மாளுக்கும் ஸத்புத்திரனாய் ஜனித்த இவர், பெற்றோர்களின் நல் ஆசியுடன் 1945ம் வருடம் திருவனந்தபுரம் வங்கியில் சேர்ந்து 40 வருடங்கள் நன்கு பணியாற்றினார். வங்கியில் பணியாற்றினாலும் அவர் நாம ஸங்கீர்த்தனத்தை ஒரு நித்ய கர்மானுஷ்டானகளில் ஒன்றாக செய்து வந்தார். புதுகோட்டை கோபாலக்ருஷ்ண பாகவதர் வகுத்துக் கொடுத்த நாம ஸங்கீர்த்தன பத்ததியை அனுஷ்டித்து அவரது சிஷ்யபரம்பரைகளில் ஒருவராக ப்ரகாசித்து நாம ஸங்கீர்த்தனம் செய்து ப்ராபல்யமாய் நிலவி வந்தார். ஸ்ரீகல்யாண க்ருஷ்ண பாகவதரிடம் ஜயதேவரின் 24 அஷ்டபதிகளையும் முறையாய் பயின்று அஷ்டபதிகளை பாடுவதில் ஒரு ஜயதேவராய் மிளிர்ந்தார். திருவனந்தபுர சமஸ்த்தானத்தில் ஹார்மோனிய சக்ரவர்த்தியாய் திகழ்ந்த திரு வைத்யநாத பாகவதரிடம் முறையாய் சங்கீதமும் டோலோத்ஸ்வபத்ததியை பயின்று நாம சங்கீர்த்தனத்தை செவ்வனே செய்து வந்தார். இதுபோன்ற குருமார்களின் வழியில் அவர்களது புகழ் அதிகரிக்குமாறு 72 வருடங்களாய் இந்த வேள்வியை நடத்திவந்தார்.
1945ம் வருடம் ஹ்ருஷிகேச சிவானந்த ஆஸ்ரம ஸ்வாமி ப்ரும்மானந்தா Divine Life Society என்ற பக்தியை பரப்பும் ஒரு சேவாஸ்ரமத்தை துவக்கிவைத்து, அதன் முக்கிய பொருப்பாளராய் திரு.ராமஸ்வாமி ஐயங்காரை நியமித்தார். அன்று ஆரம்பித்த இந்த வேள்வியை இன்று வரை மிகவும் ஸ்ரத்தையுடன் சரித்திர புகழ் உள்ளதாய் செய்து வந்தார்.
1955ல் ஸ்ரீவேங்கடேஸ்வர ஐய்யர், திரு ஸ்ரீனிவாசன் போத்தி, ஸ்ரீகேசவன் போத்தி, திரு ஜனார்த்தனன் போத்தி, ஸ்ரீசுப்பிரமணிய ஐய்யர் என்ற முக்கிய ப்ரமுகர்களின் உதவியுடன் திரு.ராமஸ்வாமி ஐயங்கார் ஆரம்பித்த பஜனை மண்டலி இன்றும் சிறப்பாய் நடந்து வருகிறது.
எல்லா வியாழக்கிழமைகளில் அனுமார் கோவிலிலும், எல்லா சனிக்கிழமைகளில் தெற்குத் தெருவிலுள்ள சங்கரமடத்திலும், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீவராகர் சந்நதியிலும், திரு.ராமஸ்வாமி ஐயங்காரால் நாம சங்கீர்த்தனம் இன்றுவரை நடத்தப்பட்டு வந்தது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியன்று தொடங்கி 41 நாட்கள் ஸஹஸ்ர நாம ஜபம் மற்றும் நாமசங்கீர்த்தனம் இன்று வரை நடத்தப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் கோட்டையைச் சுற்றி உள்ள அக்ரஹாரத்தில் வீதி பஜனை செய்யப்பட்டு
வந்தது. இந்த 30 நாட்கள் வீதி பஜனை, ராதா கல்யாணத்துடன் பூர்த்தியாகும். இந்த நாம சங்கீர்த்தன வேள்வியை எந்த விதாமான ஆதாயத்திற்கும் அல்லாமல், தனது ஆத்ம த்ருப்திக்காக இன்று வரை நடத்தி வந்த ப்ரும்மஸ்ரீ பாகவத திலகம் திரு.ராமஸ்வாமி ஐயங்காரின் இந்த வேள்வியை, திருவனந்தபுர ஸத்குரு கோபாலக்ருஷ்ண நாம
ப்ரசார பஜனை மண்டலி, இவரது ஆசியுடன் இன்றும் தொடர்கிறார்கள் / தொடர்வார்கள்.
No comments:
Post a Comment