போப்பால் பேரழிவு அல்லது போப்பால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.
யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். [1] பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.[2]இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No comments:
Post a Comment