இன்று “புச்ச ஏகாதசி” அல்லது வைஷ்ணவ ஏகாதசி, மற்றும் ஸ்ரவண வ்ருதம்
அனுஷ்டிப்பவர்களுக்கான நாள். மேலும் இன்று ஹயக்ரீவ ஜயந்தி கொண்டாடும் ஒரு புண்ணிய
வ்ரத தினம். ஒரே நாளில் நாம் ஹயக்ரீவரையும்
வாமனரையும் நமஸ்கரிக்க கிடைத்த தினம்.
ஹயக்ரீவர் என்றாலே நம் எல்லோர் நினவிலும் வருவது திருவஹீந்தபுர தேவனாதரும், “கவிதார்க்கிக ஸிம்ஹம்” ஸ்வாமி தேசிகரும் ஆவார்கள்.
மது கைடபன் எனும் அசுரர்கள்
படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களைப் பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள
உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும்
தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும்
குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர்
என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம்
தந்தார்.
மது, கைடபன் அசுரர்களை அழித்த
பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர
வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு
கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர்
வணங்கப்படுகிறார்.
கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவான மஹான் ஸ்ரீவாதிராஜர்,
ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு
படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.
எட்டு வயதில் சன்யாசம் பெற்ற பூவராஹர் என்ற ஸ்ரீவாதிராஜர் விஷ்ணுமை ஹயக்ரீவ
வடிவத்தில் பூஜித்து அவரின் அருள் பெற்றவர். ஸ்ரீவாதிராஜர் “கடலை பிண்டி” என்ற ப்ரசாதத்தை தனது சிரஸித்தில் வைத்து ஹயக்ரீவரை வேண்டி அழைப்பார். அவரும்
வாதிராஜரின் அழைப்பை ஏற்று குதிரை வடிவில் வந்து, முன் கால்கள் இரண்டையும் அவரது
தோளில் வைத்து அவரது பின்புறத்தில் நின்று உண்பது தினம் நடந்த ஒரு அற்புதம்.
அது
நிஜம்தானா என்று பார்க்க விழைந்த ஒரு மூடன், இக்காட்சியை கண்ட மறுநிமிடம் அவனது
இரண்டு கண்களும் குருடாயிற்று.
வாதிராஜர் ப்ருந்தாவனம், கர்நாடக மாநிலத்தில் சிர்சி என்ற
பட்டிணத்தில், “சோதே” என்ற கோவிலில் அமைந்துள்ளது. தவளகங்கா என்ற அங்குள்ள குளத்தில், இரண்டு
மூலைகளில் தான் நீராடலாம். ஒரு மூலையில் “பூதராஜா” இன்றும் இருப்பதாக ஒரு ஐதீகம். இங்கு
ஒரு புதுமையான் ஒரு சம்பிரதாயம் உண்டு. கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும்
பூதராஜாவிற்கு தேங்காய் சமர்ப்பிப்பது என்பது ஒரு வேண்டுதலாகும்.
தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.
"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே"
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'
'உத்கீத ப்ரணவோத்கீத,
ஸர்வ வாகிச்வரேச்வர:
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீர் ஸாம மூர்த்தயே
நம:
அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:
வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே
கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே
நம:
பகவான் ஹயக்ரீவர் தென்னிந்தியாவிற்கு மாத்திரம் சொந்தமா
என்ன?
வடகிழக்கிற்கும் சொந்தம். அஸ்ஸாமில் உள்ள மோனிகுட் என்ற
மலைப் ப்ரதேசத்தில் அமைந்துள்ள “ஹயக்ரீவா மாதவ கோவில்” ஒரு தொன்மையான ஒரு வழிபாட்டு
ஸ்தலமாகும். கௌகாத்தியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மலைப்
ப்ரதேசத்தில், ராஜா ரகுதேவா நாரயன் கி.பி.1583ம் ஆண்டில் புனர் அமைக்கப்பட்டதாக
கல்வெட்டுகள் கூறுகின்றன. பாலா என்ற வம்சத்து அரசர்கள் கி.மு. ஐந்தாவது நூற்றாண்டில்
நிர்மாணித்த்தாகவும் ஒரு கூற்று உண்டு. அதன்படி இந்த புனிதத் தலத்தில் தான்
புத்தர் முக்தி பெற்றதாகவும் கூறுவர்.
இந்தக் கோவிலில் நரசிம்மர் தான் முதற்கடவுளாக
வழிபடுகின்றனர். வரிசையான் யானைகள் சிற்பம் அஸ்ஸாமின் கலைத்திறனை
வெளிப்படுத்துகிறது. இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் கைகோர்த்து பரிமளிக்கிறது.
No comments:
Post a Comment