Friday, March 26, 2010

அனுமனும் துளசிதாசும்


துளசிதாஸ் அனுமனைத் தரிசித்ததை ஒரு சுவையான நிகழ்வு மூலமாகச் சொல்வர். காசியில் உள்ள கங்கையில் நீராடிய பின்பு அங்கு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை பூஜிப்பது , மாலைப் பொழுதில் ராமரது கதையினை விஸ்வநாதர் கோவிலில் பிரசங்கம் செய்வது என்பது துளசிதாஸ் தினமும் செய்யும் அனுஷ்டானம் ஆகும். ஒரு நாட்காலையில் நீராடித் திரும்புகையில் மீதமுள்ள நீரினை, கரையில் உள்ள மரத்தடியில் சேர்த்தார்.  அந்த மரத்தில் அனேக காலமாக வசித்து வந்த பிரம்ம ராக்ஷஸன் இவரால் சாப விமோசனம் அடைந்தான். அந்த யக்ஷன் துளசிதாசை வணங்கி நின்றான்.  ப்ரதிபலனாக அவர் வேண்டும் வரத்தை  அளிக்க வினவினான்.
அவர் வேண்டிய வரம்  ஒன்றே ஒன்று தான். அது அனுமனைத் தரிசிக்க.
யக்ஷன் அதற்கு ஓர் உபாயம் ஒன்றினைக் கூறினான். ஓர் வயதான பெரியவர், கந்தல் உடையினை அணிந்தவராய் தினமும் உங்கள் ப்ரவசனத்தைக் கேட்க கடைசி வரிசையில் அமர்ந்திருப்பார்.  அவர்தான் அனுமன் என்றார் அந்த யக்ஷன். அன்று இரவும் அந்த பெரியவர் வந்தார். அவரைப் பார்த்த க்ஷணமே அவர் காலில் விழ யத்தனித்தார். ஆனால் ப்ரவசனத்தை முடித்த பின்பே அவரை வேகமாக தொடர்ந்தார். நடுக் காட்டில் தான் அவரைக் காண முடிந்தது. உடனே அவர் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். ராம லக்ஷ்மணர்ளை தரிசிக்க வரம் வேண்டினார். அனுமனும் தனது சுய ரூபத்தில் அவருக்குக் காட்சி அளித்து ராம லக்ஷ்மணர்ளையும் காண்பித்ததாக ஒரு செவி வழி நிகழ்வைக் கூறுவார்கள்.
நாமும் அனுமனை தரிசிக்க நாம சங்கீர்த்தன மார்கத்தை அனுஷ்டித்து பயன் அடைவோம்.

1 comment:

  1. ராம நாம சங்கீர்த்தனம் ராமனையும்
    ராம தூதனையும் ஒரு சேர தரிசிக்க வைக்கும்

    ReplyDelete