Wednesday, March 25, 2015

Kanaka Dasa Answer "Who Will Attain Narayana's Abode Vaikunta?"

தாஸர்கள் சமூகம் என்னும் அமைப்பு கன்னட பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரை மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. அதில் வியாசராஜரின் சீடரான கனகப்பா கடவுள் ஆணைப்படித் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  தாசமூகம் அமைப்பு அவரை கனகதாசராக்கியது.  தனது மாணவர்களில் மிகச் சிறந்தவர் கனகதாசரே என வியாசராஜரே குறிப்பிட்டு உள்ளார்.  ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது அவருடைய கொள்கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன. எளிமையான பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் கன்னட ஸாஹித்யத்தில் அமைந்தது கனகதாஸரின் பாடல்கள். இன்றும் க்ராமியச் சூழலில் பாடும் பாடல்களாகத் அவரது ஸாஹித்யங்கள் திகழ்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பாடா என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை படைத் தளபதியாகப் பணியாற்றியவர். குழந்தைச் செல்வம் வேண்டி வெங்கடேசப் பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் செய்தவர். அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்கு திம்மப்பா என்று பெயர் வைத்தார். திம்மப்பா சிறந்த தளபதி ஆனார். ஒரு சமயம் திம்மப்பா போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவு இழந்தபோது கிடைத்த வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்தால் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் செல்வம், போர் வாழ்க்கை அனைத்தையும் ஒதுக்கினார். இறைப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சொந்த ஊரான பாடாவுக்கு அருகில் கேசவனுக்கு ஒரு கோயில் கட்டினார். இந்தக் காலகட்டத்தில் தான் திம்மப்பாவின் பெயர் கனகப்பாவாக மாறியது.
கனகதாசர் 15ம் நூற்றாண்டைச் (1506 – 1609) சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் . கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி தர காரணம் இவரே.

ஒரு நாள் வித்வத் கோஷ்டியைச் சேர்ந்த சில பண்டிதர்கள் மோக்ஷ சாதனத்திற்கு ப்ராம்மண ஜன்மம் வந்தால் தவிர ஆகுவதில்லை என்று வாசித்தனர். இது சகல் சாஸ்திரங்களிலும் இருப்பதாக வாசித்தனர். வாதிராஜரும் பாண்டித்யத்தினை மெச்சி நீங்கள் சொல்வது சரி என்றார். பண்டிதர்கள் கனகதாஸரின் மேலுள்ள துவேஷத்தின் காரணமாக அவரது பெயரைச் சொல்லக் கூட தயங்கினர்கள். நிலமையைப் புரிந்துகொண்ட வ்யாஸராஜர் எல்லோரையும் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

"இங்குள்ள ஜனங்களில் யார் வைகுண்டம் செல்வர்?”

இன்னார்கள் தான் மோக்ஷத்திற்குப் போவார்கள் என்று காண்பிக்க யாருக்கும் தைர்யம் இல்லை. பண்டிதர்கள் அல்லாது பாமர ஜனங்களில் எவரேனும் பதில் தெரிந்தால் பதில் சொல்லலாம் என்று கூறினார். அப்பொழுது ஸ்வாகிகள் கனகதாஸரைப் பார்த்து “கனகா இவ்வளவு ஜனங்களில் வைகுண்டத்திற்கு போகக் கூடியவர் யார் என்று சொல்வாயா என்றார். ஒவ்வொருவரின் தகுதிகள் யோக்யதாம்சங்கள் இவை, எவ்வளவு யாக யக்ஞங்கள் செய்துள்ளார்கள் என்று சொல்லி ஒவ்வொருவையும் கேட்க இவர்கள் எவரும் இல்லை என்றார். பிறகு புரந்தரதாஸரைக் காண்பித்து கேட்டார். அவரும் இல்லை என்றார். ஸ்வாமிகள் தம்மையே காண்பித்து, “நான்” என்கிறார். நீங்களும் இல்லை என்றார். பண்டிதர்கள் “மஹா ஸ்வாமி எங்களுக்கும், தாஸருக்கும் உங்களுக்கும் ஒரே சமயத்தில் அவமானம் ஏற்படலாயிற்றே என்றனர்.
ஸ்வாமிகல் கனகரைக் கேட்டார். அவரும் சிரித்துக் கொண்டே “நானு ஹோதரே ஹோதேனு” (நான் போனால் போவேன்) என்றார். ஸ்வாமிகள், புரந்தரர், பண்டிதர்கள் போகமுடியாத இடத்திற்கு இவர் எவ்வாரு செல்ல இயலும் என்று  அனைவரும் பரிகாசம் செய்தனர். ஒரு பண்டிதர் கேட்கிறார் “என்ன உனது சொற்கள் சாஸ்திர வாக்கியமா அல்லது ப்ராசீன கன்னடமா” என்று வினவ, “ப்ராமணோத்தமர்களே! பண்டித சிகாமணிகளே ஏன் கோபப்படுகிறீர்கள்  அந்த வாக்கித்தின் பொருள் இதுதான். “நானு எம்புவது ஹோதரே ஹோதேனு. இத்தரே இர்தேனு” (நான் என்பது போனால் போவேன். நான் என்பது இருந்தால் இங்கேயே இருப்பேன் என்று சொல்லி சபைய நமஸ்காரம் செய்தார்.