Monday, December 4, 2017

THIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கொப்பு தெங்குருகைக்கு உண்டோ
ஒருபார் தனில் ஒக்கும் ஊர்.
-- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்
---------------------------------------------------------------------------------
முன் உரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியரும் ஏழு பாட்டும் 
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி 
மறவாதபடி எண்பத்தெழு பாட்டும்
பின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்
இந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா இரங்கு நீயே
---  ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்
---------------------------------------------------------------------------------------
ஆழ்வார்திருநகரி என்ற தலம் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும்.
திருநெல்வேலி அருகே இருக்கும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற நம்மாழ்வார் அவதரித்த இத்தலம், தாமிரபரணிக் கரையில் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.
மூலவர் ஆதிநாதர். கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலம். ஆதியிலே தோன்றியவர்  என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று.
இத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னிதிகளில் பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள். அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள்.
கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் பயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.
நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.
இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன்நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.
அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.
திருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது.
ஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.

ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.

நம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.
16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.

புளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.
தேறிய மாஞானமுடன் திருக்கோளூரில்
சித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி
ஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு 
அனவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியேன் எனும் மதுரகவியே நீ முன்
கூறிய கண்ணிநுண் சிறுத்தாம்பு அதனில் பாட்டுக்
குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே
---  ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்
---------------------------------------------------------------------------------
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் - பாருலகில்
மற்றுமுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் 
உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர்.
- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்
----------------------------------------------------------------------------------------------
வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார்.
இந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது.
புளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன. 


No comments:

Post a Comment