Tuesday, April 19, 2016

BAGWAN KRISHNA alone can solve puzzles - Sisupal Vadham

Courtesy "Amar Chitra Katha"
இந்தப் படத்தைக் கண்டவுடன் நம் நினைவில் வருபவை அந்நாளில் நாம் தொலைக்காட்சியில் கண்ட சிசுபால வதம். நம் கண்முன் பார்ப்பது போல் ஒரு நிகழ்வைக் கொண்டுவந்துள்ளது. மொழி ஹிந்தியானாலும் நம்மால் ஒவ்வொரு சம்பாஷணையையும் நம்மால் உணரமுடிகிறது என்றால், காட்சி என்பது நம்மை எவ்வாறு ஈர்க்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். 
உடனே நம் மனதில் எழுபவை.
நல்லதொரு யாகத்தில் சிசுபாலனுக்கு அப்படியரு நிலைமை ஏன் ஏற்பட வேண்டும்? ஜோதிட சாஸ்திர வல்லவனான சகாதேவன்தானே யாகத்துக்கு நாள் குறித்தான்? இப்படியரு உயிர்ப்பலி
நிகழக் காரணமான கெட்ட நாளில், கெட்ட வேளையில் அவன் ஏன் நாள் குறிக்க வேண்டும்? அதே நேரம், சிசுபாலன்தான் முறை தவறி நடந்தான் என்றாலும், தர்மபூமியான யாகசாலையை கண்ணன் ஏன் யுத்த பூமியாக்கி ரத்தம் சிந்த வைக்க வேண்டும்? சிசுபாலனைக் கொல்ல அதுவா இடம்? அதுவா தருணம்? இது தர்மமா?
இப்படியெல்லாம் பல கேள்விகள், தருமன் நடத்திய ராஜசூய யாகம் முடிந்ததுமே எழுந்தன

ஆனால், கண்ணன் அந்தக் கேள்விகளுக்கு அப்போது பதிலளிக்கவில்லை. அதே கேள்விகளைத்தான் ராஜசூயம் நடந்து, பல வருடங்கள் கழித்து உத்தவர் கேட்டார். அப்போது கண்ணன் தெளிவான பதில் தந்தான்.
சிசுபாலன் பிறப்பால் உயர்ந்தவன். வாழ்க்கை அமைப்பாலும், தீய ஒழுக்கங்களாலும் பண்பிழந்தவன். அவன் தாய் நல்லவள். கண்ணனிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவள். தன் மகன் எப்படியாவது திருந்தி நற்கதி பெற வேண்டும் எனத் தவம் செய்தாள். 'அவன் தவறாக நடந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனை தர வேண்டாம்'' எனக் கண்ணனிடம் கேட்டுக் கொண்டாள். 'அவன் நூற்றெட்டு முறை தவறு செய்வதைப் பொறுப்பேன். அதற்கு மேலும் தவறிழைத்தால் தண்டனை தப்பாது' என்று கண்ணன் சிசுபாலனின் தாயிடம் கூறியிருந்தான்.
'அப்படியே என் மகன் சிசுபாலன் தண்டனை பெற்றாலும், அவனை மன்னித்து மோட்ச சாம்ராஜ்யம் நல்க வேண்டும்'' என்று அடுத்ததாக வரம் கேட்டாள் சிசுபாலனின் தாய். விசித்திரமான வரமானாலும், அந்த வரத்தைத் தந்து வாக்களித்தான் கண்ணன்.
இதை நிறைவேற்றுவது எளிதல்ல. தீமைக்குத் தண்டனையும், நன்மைக்கு உயர்வும் நல்குவதே தர்ம நெறி! சிசுபாலனோ நன்மை எதுவுமே செய்யாதவன். அவனுக்கு மோட்சம் கிட்டுவது எப்படி? இதுதான் பிரச்னை.
கண்ணன் ஒருவனால்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியும். ராஜசூயம் எனும் சிறப்பான யாகத்தில் சிசுபாலன் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான். முனிவர்கள் ஓதிய மந்திர பலத்தாலும், தூவிய அட்சதையாலும், வழங்கிய ஆசீர்வாதத்தாலும், தெளித்த புனித நீராலும், ஓரளவு புனிதப்பட்டிருந்தான் சிசுபாலன். யாக அக்னியில் தோன்றிய தேவதைகளின் அனுக்கிரகம், அவன் மீதும் விழுந்திருந்தது. சேர்த்த புண்ணியங்களை அவன் கரைத்துவிடும் முன்பே, அவனைக் கரையேற்ற விரும்பினான் கண்ணன். அப்போதுதான் சிசுபாலன் கண்ணனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் திட்டிய வார்த்தைகளை, தன்னை பூஜித்த மந்திரமாக, - நூற்றெட்டு அர்ச்சனைகளாக ஏற்றுக் கொண்டான் கண்ணன்.
இதன்மூலம் நிந்தனையையே ஸ்துதியாக ஏற்றுக்கொண்டு, அந்தப் புண்ணியமும் சிசுபாலனைச் சேர வழி செய்தான் கண்ணன். காலம் கடந்தால் அவன் மேலும் பாவம் செய்துவிடுவான்; அதோடு, அவன் மோட்சம் செல்லும் தகுதி பெற புனிதமான இடத்தில் உயிர் நீக்க வேண்டும். புனிதமான ஆயுதத்தால் மடிய வேண்டும். மகா சுதர்சனம் அவன் சிரத்தை அறுக்க, அவன் உடல் ராஜசூயமான பூமியில் விழ, அந்தப் புண்ணிய பலனால், அவன் ஆன்மா மோட்சமடைந்தது. தீமைக்கும் நன்மை செய்யவே யாக பூமியை யுத்த பூமியாக்கினான் கண்ணன். உத்தவர் கேட்ட மற்ற கேள்விக்கும் கண்ணன் பதில் தந்தான்.
'ராஜசூயத்துக்கு நாள் பார்த்தவன் சகாதேவனில்லை; கண்ணனேதான்!’ - இதுதான் அந்தப் பதில்.
சகாதேவனுக்கு தன் சாஸ்திரக் கணக்கைவிட கண்ணனின் சங்கல்பக் கணக்கில் நம்பிக்கை இருந்தது. அதனால் கண்ணன் குறித்த நாளையே ராஜசூயத்துக்கு ஏற்பாடு செய்தான்.
'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், கண்ணன் சொல்வதும் செய்வதுமே மெய்என்ற உண்மையை ஏற்கெனவே உணர்ந்திருந்த உத்தவர், அதனை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டார்.
-  நன்றி தினமலர் 
-----  நன்றி அமர் சித்ரகதா