Monday, November 19, 2018

Ragasri 108


108 வருடங்களுக்கு முன் இந்தப் புவியில் அவதரித்து, தான் வாழ்ந்த 54 வருடங்களில் 300க்கும் மேல், GNB, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐய்யர், ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி என்ற சங்கீத வல்லுனர்களின் உந்துதலுடன், சமகால  க்ருதிகள் பல புனைந்து கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளித்துள்ளார். முருகக் கடவுளும், குருவாயுரப்பனும் அவரது மடியில் தவழ்ந்து, ராகஸ்ரீ ராகவனை பல க்ருதிகளை படைக்க வைத்து அனுபவித்ததை, நம் போன்றவர்கள் இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லவேண்டி வலைத் தளத்தின் மூலம் அளிக்கிறேன். முருகனை ஆராதித்து பல க்ருதிகளை இயற்றி ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி, முருகதாஸ் இவர்களது முன்னிலையில் எனது தமக்கை பூமா நாராயணன், அண்ணன் திருவையாறு க்ருஷ்ணன் இவர்களால் 1956-1960 வருடங்களில் முருகன் படி உற்சவத்தில் அறங்கேற்றபட்ட எண்ணற்ற பாடல்கள் தூய நதி நீராக தவழ்ந்து, கர்நாடக சங்கீதம் என்ற ஸாகரத்தில் கலந்து எல்லோரும் இன்புற்றிருக்க இன்றும் ரீங்காரம் செய்கிறது. அவர்களிடமிருந்து கேள்வி ஞானத்தால் அறிந்து, கேட்டு நானும் பாடி பரவசப் பட்டு உங்களுடன் அனுபவிக்கிறேன்.

Monday, September 17, 2018

Yoga Sankeerthana Yagam - யோகமான சங்கீர்த்தன யாகத்தில் வந்த ........

 


ஆசார அனுஷ்டானத்தை பின்பற்றும் ஒரு பெரியவர், ஒரு தீனமான வறியவனைப் பார்த்து அவனது சரீர பலவீனத்தின் காரணத்தைக் கேட்டார். மேலும் அவனுக்கு எளிமையான நல்ல உபதேசங்களை அருளினார். ஜபம், த்யானம், கீர்த்தனம் என்ற மூன்று விதமான வழிகளால் கடவுளின் அருளைப் பெறலாம் என்றார். அது அவனது வறுமை, உடல் பலவீனத்தை ஜெயிக்கும் உபாயமாகவும் இருக்கும் என்று உறைத்தார்.
புஷ்டியான உணவுப் பண்டங்கள் எனக்குக் கிடைப்பதில்லை, அதனால் பட்டிணியாக உள்ள என்னால் எவ்வாறு இந்த மூன்றில் ஒன்றை அனுஷ்டிக்க முடியும் என்றான். மழையின்மையே இதன் காரணம் என்றான்.
அந்த தவசீலரும் மழையைத் தரும் வருண பகவானை காரணம் கேட்டார். “எனது செயல் அக்னியைப் பொறுத்தது, ஆகையால் அக்னி பகவானிடம் காரணம் கேளுங்கள் என்றார்.
மக்கள் வேள்விகள் நடத்தவில்லை. அக்னிஹோத்ரிகள் தங்கள் கடமைகளிலிருந்து தவறினர். மேலும் வாயு மண்டலத்தை பலவிதமான வேண்டாத பொருட்களால் அசுத்தம் செய்துள்ளனர். ஆகையால் என்னால் முறையாக செயல் படமுடியவில்லை. வாயு மண்டலம் எனக்கு உறுதுணையாக இல்லை என்றார்.
ஜபம் அற்ற மனிதர்களால் எனது மண்டலம் மேலும் அசுத்தாமானதாக ஆனதால் என்னால் சரியாக செயல்படமுடியவில்லை என்றார் வாயு மணடலம். எனது தலைவனான ஆகாசத்தைக் கேளுங்கள். அவர் அதற்கு ஏதாவது பரிகாரம் உரைப்பார் என்றார்.
ஆகாசமோ மிகவும் விசனத்துடன் கூறியது. வாயு, அக்னி, தண்ணீர், பூமி ஆகிய நான்கின் உற்பத்திஸ்தானம் நான் தான். ஆனால் மக்களின் நாராசமான ஒலிகளால் நான் துன்புறுத்தலை அடைந்துள்ளேன். பகவன் நாமாவிற்கு பதிலாக வேண்டாத ஒலிகளும், கடும் சொற்களுமே நான் அன்றாடம் கேட்பதால் நான் வறியவனானேன். மத போதகர்களும் அதற்கு விதி விலக்கல்ல. மக்களை உண்மையான வழியில் நடத்திச் செல்லாமல், தங்களை மற்றவர்கள் பெருமையாகப் பேசுவதை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களும் செல்வத்தை ஈட்ட தங்களது பணியிலிருந்து சற்றே விலகியுள்ளனர். கலிபுருஷன் தனது வேலையை செவ்வனே செய்கிறான். அவனது பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற எளிய வழி, கடவுளை த்யானம் செய்து அதற்கான ஜபத்தை கையாள வேண்டும். இரண்டும் முடியாவிட்டால் நாம சங்கீர்த்தனம் ஒன்றே வழி. அதனைச் செய்ய அவர்களை ஊக்குவியுங்கள் என்றார்.
அந்தப் பெரியவரும் நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவம், செய்முறை, வழியான சம்ப்ரதாயம் எல்லாம் போதித்தார். உஞ்ச வ்ருத்தி என்ற வழியையும் சொன்னார். அந்நாளில் உஞ்ச வ்ருத்தி சொம்பில் அரிசிக்கு பதிலாக சொர்ணம் இருந்தால் அதனை வேண்டாத கல் என்று வீசி எறிந்த தேசிகர் போன்ற சமய ஆச்சார்யர்கள் பலர் இருந்தனர். ராஜா அளித்த செல்வம் வேண்டாம், ராம நாமம் ஒன்றே போதும் என்று ஒரு த்யாகராஜரும் இருந்தார். இப்பொழுதோ சொர்ணம் வழியும் அந்த உஞ்ச விருத்தி சொம்பில் உள்ள சிறிதளவு அரிசியை கல் என்று வீசி எறியும் காலமாக உள்ளது. நாம சங்கீர்தனம் என்ற எளிய வழி, கீர்த்தனமாகி, கச்சேரியாகி, செல்வம் ஈட்டும் ஒரு அருமையான வழியாக எல்லோரும் அறிந்துள்ளனர்.

நாம சங்கீர்த்தனம் என்ற ஏணியை எட்டி உதைத்து மேலே சென்றுவிட்டனர். அவர்கள் வழிவந்த மதத்தையும் மதமுடன் எள்ளி நகையாடுகின்றனர்.
நாம சங்கீர்த்தனம் எவ்வாறு மாறுதல் அடைந்தது. எந்த எந்தப் போர்வைகள் அதனை அழகு படுத்துவதாக எண்ணி, அழகைக் குலைத்தது என்பதை பின் வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.