நம்மில் பலர் அறுபது எழுபது பிராயம்
தாண்டியவர்கள், இன்று காலை எங்கு சாவியை வைத்தோம் என்பதை மறந்து
விடுவர். அதேபோல் இன்று காலை நாம் யாருடன் பேசினோம்என்பதும்,
அவர் பெயர் என்ன என்பதையும் மறப்பதற்கு ப்ரமயங்கள் உள்ளன. ஆனால்
அவர்களது 10-15 வயது பிராயத்தில் நடந்த பலநிகழ்வுகளை அவர்களால்மறுபடியும் அவர்களது
நினைவிற்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு நானும் என்னுடைய இளம்பிராயத்தில் நடந்த நிகழ்வுகளை
மனதில் கொண்டு வர எத்தனித்தேன். பல சமயம் நமது சிந்தனையில் திரைப்படம் பார்ப்பது
போல பல நிகழ்வுகள் நம் கண்முன் வந்து நிற்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு.அதனைக் காண்பதற்குஇந்த பாடல் ஒரு
காரணமாய் அமைந்தது.
எங்களது தகப்பனார் திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியில் 1910-20 ஆண்டுகளில்
படித்தவர். பழைய மாணவர் என்பதால் 1960 வது வருடம்
பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்ற “கண்ணன் விடு தூது” என்ற ஒரு நாடகத்திற்கு பாடலை எழுதி, இசையும்
அமைக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் அவர்க்கு அளித்திருந்தது. பள்ளியின் சமஸ்க்ருத ஆசிரியராய் இருந்த
திரு தாமல் ஸ்ரீநிவாசன் என்பவர் நாடகத்திற்கு வசனம் எழுதி கண்ணனாய் நடித்தார்.கண்ணனை சகாதேவன் கட்டுவதாய் உள்ள ஒரு அறிய காட்சியை, நாடகத்தில் சேர்க்க ஆசைப்பட்ட எனது தகப்பனார், அதற்கு
ஏற்ற ஒர் பாடலை எழுதி, அதற்கு இசையையும் அமைத்தார்.அதனை எனது தமயன் திரு திருவையாரு க்ருஷ்ணன் அவர்கள்
அன்று பாடி எல்லோரையும் வசப்படுத்தினார்.
நாராயணீயத்தின் 100 அங்கங்களின் சமஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழில்
மொழி பெயர்த்து பல பாடல்களை இயற்றியுள்ளார். அதில் வரும் ராமாயண காவியத்தை எனது ஒரு
பதிவில் பாடியுள்ளேன். பால கண்ணனை யசோதை எவ்வாறு அனுபவித்தாள்; மற்றும் பல கண்ணனின்
லீலைகளை பல பாடல்களாய் பட்டத்ரி அனுபவித்தது போல இவரும் அனுபவித்து, அவைகளை இந்த நாடகத்தில்
சேர்த்திருந்தார்.
நாராயணீயத்தில், பாகவதத்தில் இல்லாத ஒரு காட்சியை எவ்வாறு அவர் இதில்
இணைத்தார் என்பதை சிறிதே ஆராய்ந்தேன். இணைய தளம், எளிதில் அறிய பழைய புத்தகங்கள் கிடைப்பது
என்பது போன்ற பல வசதிகள் இல்லாத அந்த நாட்களில், எவ்வாறு இந்த சிறந்த காட்சியை, எனது
தகப்பனார் சித்தரித்தார் என்று சிறிதே வியந்தேன்.
எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் “ராகஸ்ரீ”
என்ற அங்கிதத்துடன் படைத்த பல க்ருதிகளில் ஒன்றான, இந்த பாதுகை மஹாத்மிய க்ருதி, இன்றைய
ஸ்ரீராம நவமி நன்னாளில் உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது தமக்கை திருமதி ரமா ரங்கநாதன், பாதுகா
ஸஹஸ்ர பாராயணம் என்ற ஒரு வேள்வியை, அனுதினமும், ஹைதராபாத்தில் நட த்தி வருகிறார். எனது
மற்றுமொறு தமக்கை 50 வருடமாக, பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐயங்கார் நடத்திவந்த நாம சங்கீர்த்தனத்தை,
இன்றும் தொடர்ந்து நடத்தி, ராகஸ்ரீ க்ருதிகளை எல்லோருடன் பகிர்ந்து வருகிறாள்.எனது தமையன் சங்கீதாச்சார்யா திரு. திருவையாறு க்ருஷ்ணன், லாஸ்
ஏஞ்சலில், 42 வருட காலமாக நாம சங்கீர்த்தனவேள்வியை
விமர்சயாக செய்து வருகிறார்.
நானும் அவர்களது நாம சங்கீர்த்தனவேள்வியில் கலந்து
கொண்டு, இந்த பாடலை சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
108 வருடங்களுக்கு முன் இந்தப் புவியில் அவதரித்து, தான் வாழ்ந்த 54 வருடங்களில் 300க்கும் மேல், GNB, மஹாராஜபுரம்
விஸ்வநாத ஐய்யர், ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி என்ற சங்கீத வல்லுனர்களின் உந்துதலுடன், சமகாலக்ருதிகள் பல புனைந்து
கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளித்துள்ளார். முருகக் கடவுளும், குருவாயுரப்பனும் அவரது மடியில் தவழ்ந்து, ராகஸ்ரீ ராகவனை பல க்ருதிகளை படைக்க வைத்து அனுபவித்ததை, நம் போன்றவர்கள் இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லவேண்டி வலைத்
தளத்தின் மூலம் அளிக்கிறேன். முருகனை ஆராதித்து பல க்ருதிகளை இயற்றி ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி, முருகதாஸ் இவர்களது முன்னிலையில் எனது தமக்கை பூமா நாராயணன், அண்ணன் திருவையாறு க்ருஷ்ணன் இவர்களால் 1956-1960 வருடங்களில் முருகன் படி உற்சவத்தில்
அறங்கேற்றபட்ட எண்ணற்ற பாடல்கள் தூய நதி நீராக தவழ்ந்து, கர்நாடக சங்கீதம் என்ற ஸாகரத்தில் கலந்து எல்லோரும் இன்புற்றிருக்க
இன்றும் ரீங்காரம் செய்கிறது. அவர்களிடமிருந்து கேள்வி ஞானத்தால் அறிந்து, கேட்டு நானும் பாடி பரவசப் பட்டு உங்களுடன் அனுபவிக்கிறேன்.