Sunday, November 16, 2014

Vyasa's Paridosha

ப்ரவசனம் அல்லது கதை சொல்லுவது என்பது ஒரு கலை. வேதகாலம் தொட்டு இன்றுவரையிலும், அன்னை பரிவுடன் சோறு ஊட்டுதல் தொடங்கி முதிய வயதில் மரணத்தை எதிர்பார்த்து பகவானின் நாமத்தில் ஈடுபடும் ப்ராயாம் வரையிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா மதத்தவரும் அவரவர்கள் மத சம்பந்தமான் கதைகளைக் கேட்பதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு.
தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த மகரிஷிகளுக்கெல்லாம் முக்கியமானவரும், ரிக்வேதியுமான சௌனக மகரிஷி ஸூதபௌராணிகரை,  பாகவத வ்ருத்தாந்தங்கள் எந்தெந்த யுகங்களில், எந்த இடங்களில், யாது காரணம்கொண்டு தூண்டப்பட்டு வ்யாஸபகவான் பாரதத்தைச் செய்தார் என்று கேட்க, பாகவதத்தின் முதல் ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயம் மெல்ல ஸ்வாரஸ்யமாக நடைபோடுகிறது.
வ்யாஸரின் வ்யஸனம்
யுகக் கணக்கில் மூன்றாவதான த்வாபரயுகம் ஏற்பட்ட அளவில், பராசரர், விண்ணில் க்ரஹ ஸஞ்சாரங்கள் நல்ல இடத்தில் இருக்கும் ஒரு அறிய முஹுர்த்ததில் இருக்கும்போது வாஸவியிடத்தில் கூட,  ஞானியான வ்யாஸர் அவதரித்தார். 
ஜாபாலியின் மகளான வாடிகாவிற்கும் வ்யாஸ மகரிஷிக்கும் மகனான சுகர் அவதரித்தார்.வ்யாஸர் சுகருக்குச் சொல்ல; பின்பு சுகர் பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்ல; பின்பு ஒரு சமயம் பாகவதக் கதையை ஸூதர் சொல்ல சௌனகர் கேட்க என்று வ்ருத்தாந்தம் இன்று வரை தொடருகிறது.
சாதுர் ஹோத்ரம் கர்ம ஸுத்தம் ப்ரஜாநாம் வீக்ஷ்ய வைதிகம்
வ்யததாத் யஜ்ஞஸந்தத்யை வேதமேகம் சதுர்விதம்
ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரும்மா என நான்கு ரித்விக்குகளால் ஏற்படுத்தப்பட்ட வேத ஸம்பந்தமான கர்மாவை யாகம் செய்யும் பொருட்டு ஜனங்கள் பரிசுத்தப்படுத்துவதற்காக ஒரே வேதத்தை ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்தனர்.
ஆனால் முதன் முதலில் வேதங்களை "த்ரை வித்யா" என்றுதான் வழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
“யக்ஞோபவீததாரண மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ரிஷி: த்ரிஷ்டுப் சந்த:
த்ரைவித்யா தேவதா:”
பில்லி, சூனியம், மாந்திரீகம், மருத்துவம், ராஜநீயம், யுத்தவ்யூகம், அஸ்த்ர ஸஸ்த்ர ப்ரயோகங்கள் முதலியவைகளுக்கு உண்டான மந்த்ரங்கள் அடங்கிய பகுதி அதர்வண வேதம். இந்த மந்திரங்கள் பல தகாத காரியங்கள் செய்யவும் பயன்படுத்தப்பட்டதால் வஸிஷ்டர் இந்த மந்த்ரப் பகுதிகளை ஒதுக்கி ரிக், யஜுர், ஸாம முன்று பகுதிகளை மட்டும் ஆதரித்தார்.
அதர்வண வேதத்தை வேதங்களில் ஒன்றாக கருதாத வழக்கம் வஸிஷ்டர், அவரது மகன் சக்தி, சக்தியின் மகன் பராஸரர் என்ற மூவர் காலத்திலிருந்து வந்துள்ளது. "மஹா அதர்வான்" ஜாபாலிக்கும் பராஸரருக்கும் இதனால் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டன. எனினும் ஜாபாலியின் மகள் வாடிகாவை மணந்து நான்கு வேதங்களாக வடிவமைத்தும் இதிஹாஸங்களையும் புராணங்களயும் ஐந்தாவது வேதமாக வ்யாஸர் வகைப்படுத்தியும் செய்தார்.
பைலர் ரிக் வேதத்தையும், ஜைமினி ஸாமவேதத்தையும், வைசம்பாயனர் யஜுர் வேதத்தையும், ஸுமந்து அதர்வண வேதத்தையும், அவரவர் சீடர்கள் மூலமாக வேத விற்பன்னர்கள் அறியச் செய்தனர். மந்தபுத்தியுள்ள புருஷர்களால் அத்யயனம் செய்யுமாறு வ்யாஸர் பல பிரிவுகளாகப் பிரித்தார். வேத அத்யயனம் செய்யத்தகாத மகளிர், நான்காவது வர்ணத்தார்கள் பயனடைய இதிஹாசங்களை இயற்றினார்.
பகவான்  சம்பந்தமான தருமங்கள் யாவையும் அனேகமாக வேதங்கள் இதிஹாசங்கள் மூலமாகச் சொல்லப்பட்டாலும் இவைகளில் சொல்லுவதில் குறையுள்ளதுபோல் கருதி வருத்தத்துடன் ஸரஸ்வதீ நதிக்கரையில் த்யானம் செய்யும் தருவாயில், இவரது வருத்ததைப் போக்க நாரதர் அங்கு ப்ரஸன்னமாகிறார். தேவர்களால் பூஜிக்கபடும் நாரதரை முறைப்படி பூஜித்து தனது வ்யஸனத்தை வெளிப்படுத்தினார். அவர் வருத்தம் தீர நாரதர் தனது அவதார வ்ருத்தாந்தத்தை வ்யாஸருக்கு கூறி ஸ்ரீமத் பாகவதத்தை பின் வரும் சந்ததிகள் அடைய வழி வகுத்தார்.