Friday, January 9, 2015

BHISHMASHTAMI - MAHABHARATHA WAR ENDS

பாணப் படுக்கையில், மரணத்தை எதிர் கொண்டு, பகவான் வாஸுதேவனின் விஸ்வரூபத்தைக் கண்ணுற்ற, பீஷ்ம பிதாமஹர், தைமாதத்தில் சுக்ல அஷ்டமி திதியன்று தனது பூத உடலை விட்டு ஸ்வர்க லோகம் சென்ற நாளாகும். அந்த நாள் வரும் செவ்வாய்க் கிழமை, 27ம் தேதி ஜனவரி மாதம் 2015 ஆகும். அன்று பீஷ்மாஷ்டமி  இந்த நாள் 5114 வருடங்கள் முன் அமைந்ததாகச் சொல்வர். இந்த நாளை மையமாகக் கொண்டு ஸ்ரீமத் பாகவதம் என்ற இதிஹாஸம் தொடங்கி கதை ரூபமாகச் சொல்லப்படுகின்றது. 
வ்யாஸர் சுகருக்கு ஸ்ரீமத்பாகவதத்தைக் கூறிய உத்தியை, இக்காலத்திலும் கதை சொல்லும் விதமாக பயன்படுத்துகிறார்கள். கதையின் முக்கிய சாரமான இடத்திலிருந்து தொடங்கி, ஏனைய உபகதைகளையும், கதையின் போக்கையும் நடுவில் சொல்லி கதைக்கு ஒரு ரூபம் கொடுப்பது என்பது வழக்கம். வ்யாசர் சொல்லிய விதத்தை வழிகாட்டியாகக் கொண்டு பல படைப்புகளை பலர் இக்காலத்திலும் பல மொழிகளிலும் அளித்துள்ளார்கள். இன்றும் இந்த விதம் வழக்கத்தில் உள்ளது.
அனர்த்தோபஸமம் ஸாக்ஷாத் பக்தியோகமதோக்ஷஜே
லோகஸ்யாஜானதோ வித்வாம்ஸ்சக்ரே ஸாத்வத ஸம்ஹிதாம்
யஸ்யாம் வைஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம புருஷே
பக்திருத்பத்யதே பும்ஸ: ஸோஹமோஹபயாபஹா
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்மஜம்
ஸூகமத்யாபயாமாஸ நிவ்ருத்தி நிரதம் முனி
ஸ்ரீமத்பாகவதம் 1-7-6,7,8
ஸ்ரீவாஸுதேவனிடத்தில் செய்யப்படும் பக்தியோகமானது நேரிடையாகவே இந்த ஜீவனுக்கு ஏற்படும் கஷ்டத்தைத் போக்குவது எனக் கண்டுகொண்டு, இந்த உண்மையை அறியாத மக்கட்கு “ஸ்ரீமத்பாகவதம்” என்ற கதையைச் செய்தார். ஜனங்களுக்கு, எந்தப் பாகவதக் கதையானது கேட்கப்பட்ட பொழுதினிலேயே, துக்கம் மோஹம் பயம் என்ற மூன்றிலிருந்து விடுபட்டு,  க்ருஷ்ண பகவானிடத்தில் பக்தியானது ஏற்படுகிறதோ, அதனை வயாஸ பகவான் செய்தும், பரிசோதனை செய்தும், முற்றும் துறந்த தனது புதல்வன் ஸுகருக்குக் கற்பித்தார். அந்த ஸுகர் எவ்வாறு பாகவதத்தைச் சொன்னார். த்வாபரயுகத்தின் அந்திமப் பகுதிக்கு நம்மை கொண்டு செல்கிறார்.
பதினெட்டு அக்ரோணி சேனையில் இருந்த ஏனைய வீரர்களும் கௌரவரகள் பாண்டவர்கள் யுத்தத்தின் பொருட்டு வீர சுவர்க்கத்தை அடைந்தபொழுது, பீமனால் தாக்கப்பட்டு துடைகள் முறிந்து மரணத்தை எதிர் நோக்கியுள்ள துர்யோதனை மகிழ்விக்க அஸ்வத்தாமன் என்ற நித்ய சிரஞ்சீவி, தூங்குகின்ற த்ரௌபதியின் குழந்தைகளது தலைகளை வெட்டி எடுத்துச் சென்று துர்யோதனிடம் காண்பிக்கிறான்.
ஆனால் துர்யோதனனுக்கே அச்செயல் நிந்திக்கத்தக்கதாய் இருந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்ட த்ரௌபதியை சமாதானப் படுத்த அர்ஜுனன், அஸ்வத்தாமனைக் கொல்வதாகச் சொல்லி, வாஸுதேவனுடன் ரதத்தில் ஏறி அவனைத் தொடர்ந்து வேகமாகச் செல்லுகின்றான். ருத்திரனிடத்தில் பயத்தால் ப்ரும்மா மிருகமாக மாறி ஓடினது போல் அஸ்வத்தாமா ஓடுகின்றான். அஸ்வத்தாமாவின் ரதக் குதிரைகள் களைப்படைந்து நின்றுவிட்டது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உடனே ப்ரும்மாஸ்திரத்தை ஜபித்து அதனை ஏவ நினைத்தான். அந்த அஸ்திரத்தை அடக்கும் உபாயத்தை அறியாத அவன், தன் உயிருக்குப் பயந்து, அந்த திவ்ய அஸ்திரத்தைப் ப்ரயோகித்தான்.
இந்த ப்ரும்மாஸ்திரத்தின் சக்தியைக் குறைக்கக் கூடிய அஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆகையால் அந்த அஸ்திரத்தை நீயும் ப்ரயோக செய் என்று வாஸுதேவன் சொல்ல, அர்ஜுனன் வாஸுதேவனை வலம் வந்து, பின் மந்திரத்தினை உச்சரித்து பதில் ப்ரும்மாஸ்திரத்தைத் தொடுத்தான். ப்ரளய அக்னியாக அங்கு ஜொலித்தது. ப்ரஜைகளின் கஷ்டத்தையும், லோகங்களின் நாசத்தையும் மனதில் கொண்டு, வாஸுதேவன் அர்ஜுனனை அந்த இரு அஸ்திரங்களையும் திரும்பப் பெற பணித்தார்.
அஸ்திரங்களைத் திரும்பப் பெற்ற பின், அஸ்வத்தாமை, யக்ஞ புருஷன் யாகப் பசுவைக் கட்டி இழுத்துவருவது போல் இழுத்து வந்து, த்ரௌபதியின் முன் நிறுத்தினான். தருமத்தை பரீக்ஷிக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனால் ஏவப்பட்டவனாயிருந்த போதிலும், தருமத்தை அனுஷ்டித்து, அர்ஜுனன் அவனைக் கொல்லாது, அஸ்வத்தாமனின் தலையிலுள்ள மணியை கேசங்களோடுகூட கத்தியால் அறுத்தெறிந்தான்.
வபனம் த்ரவிணாதானம் ஸ்தாநாந்நிர்யாணம் ததா
ஏஷஹி ப்ரஹ்மபந்தூநாம் வதோ நான்யோஸ்திதைஹிக:
ஸ்ரீமத்பாகவதம் 1:7:57
முண்டனம் செய்தலும் பொருளைப் பிடுங்கிக் கொள்ளுதலும் அவ்விதமே இருக்குமிடத்திலிருந்து கிளம்பி விடுதலும் என்ற இதேதான் ப்ராமணர்களுக்கு தண்டனை ஆகும். சரீர சம்பந்தமான வேறு எந்த தண்டனையும் இல்லை என்பது அக்கால வழக்கம். அதன் படி அஸ்வத்தாமனை அர்ஜுனன் தண்டித்து அனுப்பினான். பின்பு த்ரௌபதியுடன், பஞ்ச பாண்டவர்கள் இறந்த தங்கள் பிள்ளைகளுக்கு தகனம் மற்றய ஏனைய க்ருயைகளைச் செய்ய விழைந்தனர்.