Thursday, October 17, 2013

KARAHARAPRIYA - A TRANQUILIZER

ஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்துஸ்வாமி தீக்ஷிதரும், ஸ்யாமாசாஸ்திரிகளும் இநத ராகத்தில் பாடல்களை தொகுக்கவில்லை. ஏன் அமைக்கவில்லை என்பதற்கான பதில் எந்த ஏட்டுச் சுவடிகளிலும் எழுதவில்லை. ருத்ரப்ரியா என்ற ராகத்தில் ஒரு பாடலை தீக்ஷிதர் அவர்கள் இயற்றியுள்ளார். அவரோகணத்தில் தைவதம் இல்லாது அஸம்பூர்ண மேளகர்த்தாவாக அமைத்துள்ளார். 
டைகர் வரதாச்சாரியார் எந்த ஒரு ராகத்தை சீடர்களுக்குக் கற்றுத்தந்தாலும் அதனை மிகவும் விரிவாகவும், எல்லா நுணுக்கங்களையும் போதிப்பார் என்று அவரது சீடரான திரு.எஸ்.ராமநாதன் அவர்கள் சொல்வார், “காலையில் 6மணி அளவில் கலாக்ஷேத்ராவின் ஆலமரத்தடியில் சங்கீத வகுப்பினை ஆரம்பித்தால், தலையில் அன்று வைத்துக் கொண்ட எண்ணை மதியம் 12 மணிக்குள் உடலில் முழுவதும் க்ரஹித்துவிடும் வரை வகுப்பினை நடத்துவார் உடல் எண்ணையை க்ரஹித்துவிடும். சீடர்கள் பாடலை நன்கு க்ரஹித்துக் கொள்வார்கள் என்பார்.
ஒரு சமயம் புல்லாங்குழல் வித்வான் விஞ்சமூரி ஸ்ரீநிவாச சாரியார், திரு.டைகர் வரதாச்சாரியாருடன் வீணை தனம்மாள் வீட்டிற்குச் சென்றார். ராகங்களையும் பல்லவி அமைப்பையும் அலசிவிட்டு திரும்பி வரும் வழியில், கரஹரப்ரியா ராகத்தை பாடிக் கேட்க வேண்டும் என்ற அவாவை வெளியிட்டார். முதலில் பாட மறுத்த டைகர் அவர்கள், ஸ்ரீநிவாசாசாரியார் அவர்களை அவர் இல்லம் சென்று அழைத்து வந்து இரவு 10 மணிக்கு பாட ஆரம்பித்தார். இரவு 10 மணிக்கு ஆரம்பித்த கரஹரப்ரியா ராகஆலாபனை மறு நாள் காலை வரை நீடித்தது. பாடுவதை நிறுத்தினால் காபி தருவாதாக டைகர் அவர்களின் மனைவி அறிவித்து ஒரு வழியாக ஆலாபனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்.
த்யாகராஜ ஸ்வாமி அவர்கள் சக்கனி ராஜா, எவரனி நிர்ணயின்சி, கோரிசேவிம்பராரே, நடசி நடசி, பக்கால நிலபடி, பாஹி ராம ராம, ராமா கோதண்ட ராமா, பேரிதி நின்னு, ராமநீ சமாநமெவரு, ராமா நீயெட, சௌமித்ரீ பாக்யமே, விடமு சேயவே என்று பன்னிரண்டு க்ருதிகளை கரஹரப்ரியா ராகத்தில் படைத்துள்ளார்.

மனதில் உள்ள இறுக்கத்தையும், சோர்வையையும் நீக்கும் ஒரு அற்புதமான் ராகம். “மாயா வித்தை செய்கின்றானே அம்பலவாணன்என்று முத்துத் தாண்டவர் ஒரு பேரானந்தத்தில் கரஹரப்ரியா ராகத்தில் பாடியதாக ஒரு குறிப்பினைப் படித்தேன்

வெள்ளித்திரையில் பல பாடல்கள் இந்த ராகத்தில் முழங்கியுள்ளது. ராஜேஸ்வர ராவ் இசையில் “அறியாப் பருவமடா, சுப்பையா நாயுடுவின் இசையில் “பகவான் அவதரிப்பார் என்ற பாடல். இந்தப் பாடல்கள் கரஹரப்ரியாவை எவ்வளவு ப்ராசீனமாக கையாண்டுள்ளார்கள் என்பது தெரியும்.

“மாதவிப் பொன்மயிலாள் ஒரு மிடுக்கான பாட்டு. அருமையான் நடனம். இந்த ராகத்தை இப்படியும் கையாளலாம் என்பதற்கு ஒரு மாதிரி.
“இசையாய் தமிழாய் இருப்பவனே என்ற திரைப் பாடல் மூலம் இந்த ராகம் பாமர ஜனங்களும் அனுபவிக்குமாறு எவ்வாறு செனறடைந்துள்ளது என்பதை அறியலாம்.
கோபால விட்டல தாஸர் வாதிராஜரை மனமுருகிப் பாடியுள்ளார். “கரோகே என்று சொல்லுவர். அந்த பாணியில் வித்யாபூஷணர் பாடிய பாடலை கையாண்டு, அந்த இசைக் கோர்வைக்கு நான் பாடி பதிவு செய்துள்ளேன். உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து இந்த தகவலை பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment