இன்று விஜயதசமி.
இந்த நாளை நாம் என்றுமே மறக்கமுடியாத நாளாகும்.
கௌரவர்கள் சேனை விராட ராஜ்யத்தின் கால்நடை உள்ள
இடத்தைக் கைப்பற்றியது. விராட சைன்யம் திரும்பி ஓடிவர சேனாதிபதி உத்திர குமாரனிடம் சென்று தகவலை அறிவித்தான். அப்பொழுது
உத்திரகுமாரன் பெண்கள் சூழ அந்தப்புரத்தில் இருந்தான். பெண்கள் மெச்ச தனது வீரத்தை
இறுமாப்புடன் கூறிக்கொண்டான். எனது தேரினை நிர்வகிக்க ஒரு திறமையான தேரோட்டி இருந்தால் நாட்டின்
சேனையை நடத்தி வெற்றி அடைவேன் என்றான். உத்திரை இதனைக் கேட்டு ப்ரஹன்னளையை
(அர்ஜுனன்) தேரை ஓட்ட ஏற்பாடு செய்தாள். முதலில் நகைத்த உத்திரன் இந்த ஏற்பாட்டை
ஏற்றான். ஆனால் அங்கிருந்த பெரிய சைன்னியத்தைக் கண்ணுற்று
மன அமைதியை இழந்து ஒட ஆரம்பித்தான். ப்ரஹன்னளை தான் யார் என்று சொல்லி அவனுக்கு
தைரியம் சொல்லி வ்ருக்ஷத்தில் பாதுகாப்பாக இருந்த அர்ஜுனனது காண்டீபத்தை எடுத்து
வந்தான். காண்டீபத்தை தொட்டவுடன் அவனுக்குள் ஒரு சக்தி பிறந்தது. உத்திரகுமாரன்
தேரோட்ட ப்ருஹன்னளை கௌரவ சேனையை காற்றாய் பறக்கடித்த நாள் இன்று.
நாம்
மேற்கிந்தியக் கலாசாரத்தைப் பின்பற்றி தந்தையின் நினைவு நாள், தாயின் நினைவு நாள்
என்று பலவிதமான நாட்களை கொண்டாட வாழ்த்து மடல் அனுப்பி அத்துடன் தாய் தந்தையரை மறந்துவிடுகிறோம்.
விஜயதசமியை நாம் தாய் தந்தையை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்யும்
நாட்களாக ஏன் கொள்ளக்கூடாது? ஏனென்றால் அவர்கள்தான் நமது முதல் குருநாதர். நமது
கண்முன் உள்ள தெய்வங்களாகும்.
எனது தந்தையார்
திரு.ஸ்ரீனிவாச ராகவன் பலவிதமான கலைகளில் சிறந்து விளங்கினார். “ராகஸ்ரீ” என்ற முத்திரையில் பல பாடல்களை புனைந்து
பாடியுள்ளார். அவர் எனது முதல் குருநாதர். என்னை ஆஸ்தீக வழியில் திருப்பியவர் திரு
நாதமுனி நாரயணன் அவர்கள். கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர்கள்
திரு ராமநாதன் அவர்களும், வைரமங்கலம் லக்ஷ்மீ நாராயணன் அவர்களும் தான். எனது மகள்
அவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாள் ஒவ்வொரு விஜயதசமியன்றும் காலை 6
மணிக்கே எங்கள் இருவரையும் மலர்ந்த முகமுடன் வரவேற்று ஒரு புதிய கீர்த்தனையை
சொல்லிக் கொடுத்தபின், கலாக்ஷேத்திராவுக்குச் செல்வார். இந்த நாளை என்றும் மறவேன்.
எனக்கு உடனே
அழ.வள்ளியப்பாவின் பாடல் நினைவுக்கு வருகிறது. இந்தப்பாடலை திலங்கு ராகத்தில்
இசைஅமைத்து எனது மகளுக்கு கற்பித்தேன். இந்தப் பாடலைப் பாடி சென்னைப் பள்ளிகளுக்குள்
நடந்த இசைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றாள். அதனால் இந்தப்பாடலையும்
மறக்கமுடியாது. இந்த நாளையும் மறக்கமுடியாது.
No comments:
Post a Comment