Sunday, April 21, 2013

PRIYE CHAARUSEELE - 19th ASHTAPATHI


ஜயதேவர் 18வது அஷ்டபதியை முடித்தார். 19வது அஷ்டபதியை “வதஸியதி என்று ஆரம்பித்து ஆறு சரணங்கள் எழுதப்பட்டன. ஏழாவது சரணத்தை மனஸால் அமைத்த போது “காமமென்ற கொடிய விஷம் என் தலைக்கேறிற்று. இளந்துளிரைப் போல் சிவந்து ம்ருதுவாயிருக்கும் உன் பாதத்தை என் தலைவை, கருட மந்திரத்தைப் போல் அது விஷத்தை இறக்கும் என்று க்ருஷ்ணன் ராதையை வேண்டினதாய்த் தோன்றிற்று. இதென்ன விபரீதம். அபசாரமல்லவா என்று நினைந்து பத்மாவதியிடம் ஒலைச் சுவடியையும், எழுத்தாணியையும் கொடுத்து புத்தி தெளிய குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்து எண்ணைய்த்தலையுடன் வந்து, கல்பனை திடீரென்று தோன்றிற்று என்று கூறி 19வது அஷ்டபதியை முடித்துச் சென்றார். ஸ்நானம் செய்து போஜனம் செய்தபின் மறுபடியும் எழுத எத்தனித்த போது கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்கவைத்தது. எதை எழுத வேண்டாம் என்று பாதியில் வைத்துச் சென்றதை முடித்துவைத்துள்ளதால், சந்தேகத்துடன் வினவ உண்மை தெரிந்தது. பகவானின் லீலையை கண்டு மகிழ்ந்து, பத்மாவதிக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். என்றாலும் பத்மாவதியை தனக்குக் கிடைத்த நிதி என்று உணர்ந்து, பின் வரும் அஷ்டபதியில் பத்மாவதியின் பெயரையும் சேர்த்து பாடல்களை முடித்தார். இந்த வ்ருத்தாந்தம் நாம் எல்லோரும் அறிந்ததே.
ஒரு நாள் ராணியும் பத்மாவதியும் சம்பாஷிக்கும் போது, கணவன் இறந்தால் கற்புடைய மனைவியின் உயிர் உடனே பிறியவேண்டும் என்று பத்மாவதி சொல்ல, ராணி அதை நம்ப மறுத்து விவாதம் நடந்து முடிந்தது. மற்றொறு சமயம் ராஜனும், ஜயதேவரும் அருகிலுள்ள ஊர் சென்றபோது, பத்மாவதி சொன்ன கூற்றை பரிக்ஷிக்க, ராணி, ஜயதேவர் இறந்த்தாக ஒரு பொய்யைச் சொல்ல, அந்த க்ஷணத்திலே பத்மாவதியின் உயிர் பிரிந்தது. ராணி பயந்து நடுங்கினாள். அரசன் ராணிக்குத் தண்டனை அளிக்கத் தீர்மானித்தான். அதை அறிந்த ஜயதேவர் வருத்தமுற்று, 19வது அஷ்டபதியை மறுபடியும் பாட, தூங்கி எழுந்தது போல் எழுந்து வந்து கணவனை வணங்கி நின்றாள். உலகம் இந்த திவ்ய தம்பதிகளின் பெருமையை அன்றே உணர்ந்தது. இதுவும் கண்ணனின் லீலையே. ஆகையால் இந்த அஷ்டபதியை முகாரி ராகத்தில் பாட ப்ராசீனமாக வழி வழியாக வந்துள்ளது. பகவானை நெகிழ்ந்து அழைக்கவும்,ஸ்ருங்கார ரஸமுடன் பாடவும் உகந்த ராகம் முகாரி. 
கண்ணனின் அருள் கிட்ட நாம் எல்லோரும் இந்த அஷ்டபதியை உருகிப் பாடுவோம்.

No comments:

Post a Comment