Wednesday, January 9, 2013

ஹரியை அழைப்போம்; அருள வருவார்;

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதயம் அஸ்நாமி ப்ரயதாத்மஹ.


அன்றொறு சமயம் வேட்டுவக் குலத்தில் அவதரித்த செஞ்சு லக்ஷ்மியை மணந்து பாவன நரசிம்ஹனாய், அஹோபிலத்தில் எழுந்தருளிய மாலோலன் மட்டப்பள்ளியில் லம்பாடி இனத்துக் கிழவனிடம் செய்த லீலையை முக்கூர் ஸ்வாமிகள் விவரித்ததை படித்தேன். அதன் சுருக்கம் பின்வருமாறு. இன்று ப்ரதோஷ நாள். இந் நாளில் இதனை உங்களுடன் கேட்டு, படித்து பகிர்ந்துகொள்கிறேன் .

மட்டப்பல்லிக்கு நரசிம்மனை தரிசிக்க வந்த லம்பாடி இனக் கிழவர்க்கு, எம்பெருமானே நேரில் அர்ச்சகர் வடிவில் வந்து அருளிய செய்தி இன்றும் செவி வழியாகச் சொல்லப்படுகிறது.
காடுகள் சூழ்ந்த மட்டப்பல்லிக்கு அருகே உள்ள காட்டில் வசிக்கும் காட்டு வாழ் ஜாதி ஏழைக் கிழவன் ஒருவன் நரசிம்மனை தரிசிக்க வருகிறான். காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, அரிசி, பருப்பு, பழங்கள் என்று தனக்குப் பிடித்த எல்லாப் பொருட்களையும் ஒரு மூங்கில் கூடையில் வைத்துக் கொண்டு அங்கு வருகிறான். அந்த மண்டபத்தில் வந்து அமர்கிறான். அப்பொழுது முன்இரவு. எங்கும் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பூட்டிய சன்னதியைப் பார்த்து மிகவும் மனம் உருகி சிங்கவேள் ஹரியை அழைக்கிறான்.
திடீர் என்று அர்ச்சகர் தன் தோளில் கோவில் சாவிக் கொத்தை அணிந்தவாறு வந்து, தெலுங்கில் கேட்கிறார் “ராவைய்யா! இந்த சேபு ஏமி சேசாவு! ரா தொந்தரகா! நீகு தர்சனம் சேயிஸ்தானு. சொன்னதுடன் நில்லாமல், கிழவனை உள்ளே அழைத்துச் சென்று, தரிசனம் செய்வித்து, நைவேத்ய மிச்சத்தை அவனிடம் கொடுத்து திரும்பிச் சென்றுவிட்டார்.  உண்ட களைப்புடன் நன்கு கண் அயர்ந்தான். விடியர் காலை அர்ச்சகர் வருகிறார். தூங்கும் அவனை திட்டி எழுப்புகிறார். இது என்ன சத்திரமா அல்லது மடமா தூங்குவதற்கு என்று சொல்லி துரத்துகிறார். ஒன்றும் புரியாமல் அவன் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்கச் செல்கிறான். 
உள்ளே சென்ற அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. எம்பெருமான் மீது தேன், தினமாவு, பூக்கள், இலைகள். பரம த்ருப்தியாக எம்பெருமான் உட்கார்ந்துள்ளார். மேலும் அவர் அருகில் அந்தக் கிழவன் தென்படுகிறான். ஓடி குளக்கரைக்கு அருகில் வந்தால் அவன் நீராடுவதைப் பார்த்து, எம்பெருமான் நடத்திய நாடகத்தை அறிகிறார். அந்தக் கிழவனுக்குக் கிடைத்த எம்பெருமான் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று விக்கித்து தலைகுனிந்து லம்பாடிஜாதிக் கிழவனை வணங்குகிறார். கிழவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எம்பெருமானே நேரில வந்து தனக்கு தரிசனம் கொடுத்ததை அர்ச்சகர் வாயிலாக அறிந்து அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறான்.
அந்த நரஹரியே நம்மை அழைத்து தரிசனம் கொடுத்தாலே அன்றி நம்மால் அவனைக் காண இயலாது. மனம் நெகிழ்ந்து அவனை துதித்தால் அவனருள் கிட்டும்.



No comments:

Post a Comment