Monday, December 17, 2012

திருப்பாவை 03 - ஓங்கி உலகளந்த


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
கோதை நாச்சியார் ஏன் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களைப் பாடாமல், த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள்? இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!) என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! காரணம் இருக்கிறது! ஸ்ரீராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன், கம்சன் தவிரவும் பல அசுரர்களை பரமன் வதம் செய்கிறார். கண்ணன் மேல் மையல் கொண்டிருந்தாலும், அன்பே உருவான பூமிதேவியான (பிரேம சொரூப ஜகன்மாதா!) ஆண்டாளுக்கு (மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது!

No comments:

Post a Comment