தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!
ஏமப் பெரும்துயிலில் இருக்கும் தோழியின் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, ஆண்டாள் கோபத்துடன், "உன் மகள் தான் உமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்கிறாள். மேலும் கோதை நாச்சியார், பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று "மாமாயன் மாதவன் வைகுந்தனென்று" என்றனள். மாமாயனின் மாயத்தை புரிந்து கொண்டு நம்மாழ்வார் தம் பாசுரத்தில் "அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" என்று அருளியுள்ளார். வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! ஏமம் என்ற சொல்லுக்கு இரவு, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று பல அர்த்தங்கள் உண்டு.
அருமையான படங்களுடன்
ReplyDeleteஅற்புதமான பாசுரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..