“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்ற பாசுரத்தைப்
பாடியவுடன், நான் படித்த ஒரு சுவையான அவதார மகிமையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள
நினைத்தேன். இதோ அந்த செய்தி.
அகிலம் என்ற நாடக மேடையை நிர்மாணிக்கும் இறைவன்,
அதற்கான கதா பாத்திரங்களை முதலில் உருவாக்கிய பின் அந்த அரங்கில்
ப்ரவேசிக்கிறார். ராமாவதாரத்திற்கும்,
க்ருஷ்ணாவதாரத்திற்கும் உதவுமாறு, ப்ரம்மனின் அம்சமான ஜாம்பவானை வாராஹாவதாரதிலேயே
கொண்டு வந்து நிறுத்தி உலகுக்கு அந்த சிரஞ்சீவியை அறிமுகப்படுத்தினார்.
க்ருஷ்ணாவதரத்தில் ப்ரவேசிக்கும் பூதனை என்ற அரக்கி ஏன் உருவானாள்? எப்படி உருவானாள்
தெரியுமா?
மஹாபலியின் கல்யாணம் ஆன பெண் நிர்மலா தன் தகப்பனார்
செய்யும் யாகத்திற்கு வருகிறாள். யாகசாலைக்கு வருகை தரும் வாமனனாக நடந்து வரும்
அந்த பரந்தாமனின் முக காந்தியையும், ரூபத்தையும் பார்த்து, இவனைப் போல் தனக்கு ஒரு
மகன் பிறந்து, அவனை மடியில் கிடத்தி ஸ்தன்யபானம் செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
அந்த மாயாவி ததாஸ்து என்று வரம் அருளினார். மஹாபலியிடம் மூவடிமண் வேண்டிப் பெற்று
தாரை நீர் நிலத்தில் விழுவதற்கு முன்
“ஆழி எழ, சங்கும் வில்லும்
எழ,
திசை வாழி எழ, தண்டும்
வாளும் எழ,
அண்டம் மோழை எழ, முடி பாதமெழ
அப்பன் ஊழி எழ உலகம்
உண்டவூணே”
என்று வளர்ந்து மஹாபலியை ஆட்கொண்ட்தோடு அல்லாமல், அங்கு
வந்த மஹாபலியின் மகன் நமுசி வாமனின் காலைப் பிடித்து, பரந்தாமன் அவாமனனாகுவதைத்
தடுக்க, நமுசியையும் தடுத்தாட் கொண்ட மாயைக் கண்டு, துணுக்குற்ற நிர்மலா “உன்னைப்
பிள்ளையாகப் பெற்று ஸ்தன்யபானம் செய்ய நினைத்தேன். மாறாக உனக்கு விஷம் அல்லவா
கொடுக்க வேண்டும்” என்று
அறற்ற அவாமனன் ததாஸ்து என்றான். க்ருஷ்ணாவதாரத்திற்கு ஒரு கதா பாத்திரத்தை
அப்பொழுதே உருவாக்கி விட்டான். அவள் தான் பூதனை. என்னே அவன் மாயம் !
No comments:
Post a Comment